Tuesday, February 05, 2008

ஓடும் உலகும் ஓடாத மனமும்

திடீரென்று ஒரு நிசப்தம் ஏற்பட்டதைப்போல நிதானமாக நின்று என்னைச் சுற்றிப் பார்க்கின்றேன். எனக்கும் அப்பால் உலகம் தன் போக்கில் இயங்கிக்கொண்டே இருக்கின்றது. ஒரு துளியும் பிசகாமல் அச்சொட்டாக அடியொற்றி இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது. யார் மறித்தாலும் யார் தடுத்தாலும் தன் போக்கில் பிடிவாதமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது.



என் கடந்த காலங்களைப் போல கடந்த காலங்களின் நினைவுகளாக என்னில் ஏற்பட்ட அசூசைகளையும் ஆசைகளையும் ஆத்திரத்தையும் ஆவல்களையும் எழுதி வைத்த எழுத்துக்களும் ஒன்றுமே இல்லாததாய்த்தான் போயிருக்கின்றது.



பனி மூட்டங்களை விலத்தி வெளிப்படும் கதிர்களைப்போல அல்லது தூசிகளை விலத்தி வெளிப்படும் வழித்தடங்களைப்போல சில ஞாபங்களை மட்டும் விட்டுச் சென்றிருக்கின்றது. ஞாபகங்கள் என்பதற்கு உடனடி வலு எதுவுமில்லை. வெறுமனே அசை போடுவதற்குரிய கடந்த காலத்தின் இறப்பு என்பதற்கப்பால் அதில் எதுவுமேயில்லை.

எதிர்காலம் என்பதுவும் எதுவுமே இல்லை. நாளைய உலகில் நாம் வாழமுடியாது. வாழ முடியும் என்ற ஆதாரமற்ற நினைவு மட்டுமே நாளை.

இன்றைய காலம் மட்டுமே நமக்கானது.எதைச் செய்தாலும் இன்றைய நாள் மட்டுமே நமக்கானது. உலகம் எவளவுதான் ஓடிக்கொண்டிருந்தாலும் நம் மனம் மட்டும் அப்படியே நின்று விடுகின்றது. இப்போதைய கணத்தை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கின்றது.

இது தான் வாழ்க்கை. இந்த உலகத்தை மாற்றி விடமுடியுமென்ற நம்பிக்கையில் ஒவ்வொருவரும் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உலகம் எங்களைத்தான் மாற்றிக் கொண்டிருக்கின்றது.

நேற்று கூடாது ,இருக்காது, நடக்காது என்று பிடிவாதமாக நம்பமறுத்தவைகளுடன் இன்று சமரசம் செய்து கொண்டு வாழப்பழகியுள்ளோம். நாம் மட்டுமல்ல இந்த உலகில் வாழ்ந்த வாழ்ந்து மறைந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை மனிதர்களும் அப்படித்தான் சமரசம் செய்து கொண்டிருக்கின்றோம்.

நானும் அப்படித்தான் தமிழ்மணத்துடன் சமரசம் செய்து கொண்டிருக்கின்றேன். எனது வலைபதிவை தமிழ் மணத்தில் சேர்க்கச் சொல்லி ஒரு போராட்டம் பின் மட்டுறுத்தல் செய்தாகி விட்டது கருத்தை மறுதிரட்டல் செய்யச் சொல்லி ஒரு போராட்டம். என்ன செய்து என்ன பயன்.

மறுபக்கம் ஓடாத அடம் பிடிக்கும் ஒரு மனம் இருந்து கொண்டு என்னைச் சீண்டிக் கொண்டே இருக்கின்றது. எனது கோபங்களையும் ஆதங்கத்தையும் அது கண்டு கொள்வதாயே இல்லை. அதுவும் ஒரு ஓடுகின்ற உலகையும் ஓடாத ஒரு மனத்தையும் சந்திக்கும் வரை இப்படித்தான் இருக்கக் கூடும்.

ஞானம் எல்லோருக்கும் கிடைக்கத்தான் செய்யும். அது பலருக்கும் கசப்பான அனுபவங்களின் பின்னால் வருவது தான் பரிதாபத்திற்குரியது.

பிற்குறிப்பு: இதிலிருந்து எதைச் சாதிக்கப்போகின்றாய் என்று கேட்கக் கூடும். எனக்குள்ளும் அந்தக் கேள்விதான் ஓடிக்கொண்டிருக்கின்றது. ஒரு தீர்வு கிட்டாமலா போகக்கூடும்.

No comments: