Tuesday, February 24, 2009
தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதால்தான் பதவியைத் துறக்க விரும்பவில்லையாம் முதல்வர் கூறுகிறார்
தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இருப்பதால்தான் பதவியைத் துறக்க விருப்பமில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து, நேற்று அவர் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிலர் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது அவர்களுக்கு மட்டுமே உரியதைப் போலவும், நானும், தி.மு.க.வும் அதிலே அக்கறையற்றதைப் போலவும் மக்களிடம் செய்தி பரப்ப முயல்கிறார்கள். என் கையால் எழுதப்பட்ட செயற்குழு, பொதுக்குழு தீர்மானங்களிலேயே எந்தப் பிரச்சினைக்காக அதிகமான தீர்மானங்களை எழுதியிருப்பேன் என்று என் விரல்களைக் கேட்டால் அது கூறும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தான் என்று.
ஆனால், சிலர் இப்போது நம்முடைய தீர்மானங்களில் தீவிரம் இல்லை என்கிறார்கள். பதவியைத் துறக்க விருப்பமில்லை என்கிறார்கள் ஆட்சியிலே இருப்பதால் அதனைக் காப்பாற்ற முயலுகிறேன் என்றெல்லாம் பிரசாரம் செய்கிறார்கள்.
ஆமாம், இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு இருக்கிற அக்கறையைப் போல, இங்கேயிருக்கிற தமிழர்களையும் காப்பாற்ற வேண்டிய அக்கறையும், பொறுப்பும் எனக்கிருக்கின்றது அல்லவா? சட்டத்தரணிகளுக்கும் பொலிஸ்காரர்களுக்கும் இடையே பகை உணர்ச்சி காணப்படுகின்றது.
இரு தரப்பினரும் யார்? இருவரும் தமிழர்கள்தான். அவர்கள் இடையே மோதல் உருவாகாதா? இரத்தம் வடியாதா? அதிலே இன்பம் காண முடியாதா என்று ஏங்குபவர்களுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் உண்ணாவிரத அறிக்கையை விட நேர்ந்தது
Sunday, February 22, 2009
முல்லைத்தீவில் நடப்பது என்ன?
புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமரை படைத்தரப்பு கடந்தவாரம் ஆரம்பித்து விட்டது.
ஆனால் இந்தச் சண்டைகள் பற்றி செய்தி களோ, சண்டைகளில் ஏற்படுகின்ற இழப்புகள் பற்றிய தகவல்களோ அரச தரப்பில் இருந்தும் சரி, புலிகள் தரப்பில் இருந்தும் சரி வெளி வரவில்லை.
புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமரின் புதியதொரு பரிமாணமாக வடக்கில் இருந்து படைகளை நகர்த்தும் முயற்சிகளில் கடந்தவாரம் கூடிய அக்கறை செலுத்தப்பட் டிருந்தது.
பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் தலைமை யிலான 58ஆவது டிவிசனே புதுக்குடியிருப்புக் கான இறுதிச் சமரில் முதன்மைப் பாத்திரத்தை வகித்து வருகிறது. இந்த டிவிசனைக் கொண்டே தொடர்ந்தும் படைநகர்வுகளைச் செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
பரந்தன் மற்றும் ஆனையிறவில் இருந்து சமாந்தரமாக கிழக்கு நோக்கி நகர்ந்த இந்த டிவிசன் இப்போது புதுக்குடியிருப்புக்கு மேற்கு, வடமேற்கு, வடக்கு என்று பல திசைக ளில் பரவி நிற்கிறது.
கடந்தவாரம் இரண்டு முக்கியமான இலக்கு களை முன்வைத்து 58 ஆவது டிவிசன் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
புதுக்குடியிருப்பு முற்றுகையை மேலும் இறுக்குவதற்கான 58ஆவது டிவிசனின் இறுதி முயற்சியாகவும் இதனைக் கருதலாம்.
பரந்தன் முல்லைத்தீவு வீதிக்கு வடக்கே சுதந்திரபுரம் பகுதியில் இருந்து முன்னேறி வந்த 58 ஆவது டிவிசன் படையினர் இந்த வீதிக் குத் தெற்கே நடவடிக்கையை மேற்கொண்டிருந்த அதிரடிப்படை2 மற்றும் அதிரடிப் படை4 ஆகியவற்றுடன் இணைப்பை ஏற் படுத்துவது முதலாவது நோக்கமாக இருந்தது.
கடந்தவாரம் உடையார்கட்டுச் சந்திப் பகுதி யில் 58வது டிவிசனும் அதிரடிப்படை 2உம் இணைந்து கொண்ட அதேவேளை இந்த வீதி யில் மற்றொரு இடத்தில் 58ஆவது டிவிசனும் அதிரடிப்படை4உம் இணைப்பை ஏற்படுத் திக் கொண்டன.
இந்த மூன்று டிவிசன்களும் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டதை அடுத்து 58ஆவது டிவிசன் இப்போது புதுக்குடியிருப்பு மேற்கு களமுனையில் இருந்த தனது கவனத்தை பெரும்பாலும் வடக்கு, வடமேற்கு நோக்கித் திருப்பத் தொடங்கியது.
புதுக்குடியிருப்பை சுற்றியிருக்கின்ற இராணுவ முற்றுகையை இன்னமும் இறுக்குவது 58 ஆவது டிவிசனின் இரண்டாவது நோக்கமாக இருந்தது.
இதன் ஒரு கட்டமாக கடந்த வியாழக்கிழமை மாலை அம்பலவன்பொக்கணைப் பிரதேசத்துக்குள் தாம் பிரவேசித்திருப்பதாகப் படைத்தரப்பு கூறியிருக்கிறது. புலிகளின் பலமான எதிர்ப்பு மற்றும் குறைந்தது 6 மணிநேரமாக நீடித்த கடும் சண்டைகளின் பின்னரே இது சாத்தியமானதாகக் கூறப்படுகிறது. பலத்த பாதுகாப்புடன் கூடிய புலிகளின் தடுப்பரண்களை உடைத்துக் கொண்டே படையினர் முன்னேறியதாகப் படைத்தரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
படையினர் எதற்காக அம்பலவன்பொக் கணையைக் குறி வைக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. புதுக்குடியிருப்புக்கு வடகிழக்காக 8கி.மீ தொலைவில், சாளை கடனீரேரியின் மேற்குப் புறத்தில் அம்பலவன்பொக்கணை என்ற கிரா மம் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியைக் கைப்பற்றிய படையினருக்கு சாளையில் நிலை கொண்டிருக்கின்ற 55ஆவது டிவிசன் சூட்டா தரவுகளை வழங்கியது.
581 பிரிகேட்டைச் சேர்ந்த 6ஆவது கெமுனு வோச் மற்றும் 10ஆவது இலகு காலாற்படை ஆகியனவே அம்பலவன்பொக்கணைக்குள் பிரவேசித்திருக்கின்றன.
புலிகளைப் பொறுத்தவரையில் அம்பல வன்பொக்கணை நோக்கிய அதாவது புதுக் குடியிருப்புக்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் இப்போது நடந்து வருகின்ற சண் டைகள் ஆபத்தானவையாகக் கருதப்படத்தக் கவை.
சாலையை அடுத்து புதுமாத்தளனுக்கும், வட்டுளவாகலுக்கு வடக்காக உள்ள வெள்ளா முள்ளிவாய்க்காலுக்கும் இடைப்பட்ட 12கி.மீ நீளமானதும் சுமார் 2கி.மீ அகலமானதுமான கரையோரப் பிரதேசத்தை இராணுவத்தினர் பாதுகாப்பு வலயமாக அறிவித்திருந்தனர்.
இந்தப் பகுதிக்குள் பெருமளவு மக்கள் ஒதுங்கிப் போயிருக்கின்ற நிலையிலேயே அந்தப் பகுதிகளை அண்டியதாக அதாவது பாதுகாப்பு வலயத்துக்கு மேற்காக உள்ள கடனீரேரிக்கு அப்பால் தான் இப்போதைய சண்டைகள் இடம்பெற்று வருகின்றன.
ஏற்கனவே இருட்டுமடுப் பாதுகாப்பு வல யம் அறிவிக்கப்பட்ட பின்னர் உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளை இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர். அதுபோன்றே இப் போது புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப் பகு தியை அடுத்த அம்பலவன்பொக்கணைப் பகு திக்குள் நடக்கின்ற சண்டைகளானது, இரண்டு முக்கிய நோக்கங்களைக் கருத்தில் கொண்ட தாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
முதலாவது கரையோரப் பாதுகாப்பு வலயத் துக்குள் ஒதுங்கிப் போயிருக்கின்ற மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் கொண்டு வருவது.
அடுத்தது புலிகளுக்கான கடல்வழி விநி யோகங்கள் அனைத்தையும் முற்றாகத் துண் டிப்பது.
தற்போது அம்பலவன்பொக்கணைப் பகு தியை அடைந்திருக்கின்ற 58ஆவது டிவிசன் படையினரை தொடர்ந்து தெற்கே முன்னேறச் செய்வதன் மூலம் புதுக்குடியிருப்புக்கும், அர சினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயப் பகுதிக்கும் இடையிலான தொடர்பைத் துண் டிக்க முடியும்.
இதன்மூலம் கரையோரப் பாதுகாப்பு வல யப் பகுதி படையினரின் கைகளில் அதிக சண் டையின்றி விழுந்து விடும்.
அந்தப் பகுதி படையினரிடம் வீழ்ந்து விட் டால் புலிகளுக்கு இருந்து வந்த கடைசி கடல் வழிப் பாதையும் அடைபட்டுப் போய் விடும்.
இதன் பின்னர் புலிகளால் புதுக்குடியிருப் பில் நீண்டகாலம் நிலைத்து நின்று சண்டையிட முடியாத நிலைமை ஏற்படும்.
அதைவிட முக்கியமானதொரு விடயம் இராணுவ முற்றுகை இறுதிக் கட்டத்தை அடை கின்ற போது புலிகளின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப் பிச் செல்லும் மார்க்கங்களும் அடைபட்டுப் போகும். இந்த நோக்கங்களை அடிப்படையாக வைத்தே 58ஆவது டிவிசன் இப்போது வடக்கு, வடமேற்குப் பகுதிகளின் வழியாக புதுக்குடியிருப்பை நோக்கி புதிய நகர்வுகளைச் செய்கிறது.
அதேவேளை சாலையில் நிலை கொண்டி ருக்கின்ற 55ஆவது டிவிசனை தாக்குதல் நகர்வுகளில் இறக்குகின்ற திட்டம் படைத்தலைமைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் அதன் வசம் நீண்ட கரையோரப் பகுதிகள் இருப்பதால் தற்காப்புக்கு அதிக படைவளங்களைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதைவிட புலிகள் சாலைக்கு வடக்கே ஒரு தரையிறக்க தாக்குதலை மேற்கொள்ளலாம் என்ற அச்சமும் படைத்தரப்புக்கு இருப்பதாகத் தெரிகிறது.
இதனால் இப்போது 55 ஆவது டிவிசன் வெறு மனே தேடியழிப்பு, தற்காப்பு நடவடிக்கைளில் மாத்திரம் பங்குகொண்டு வருகிறது.
அதேவேளை நந்திக் கடலுக்குக் கிழக்காக நிலைகொண்டிருக்கின்ற 59ஆவது டிவிசன் தனது 593 பிரிகேட்டை நந்திக் கடலுக்கு மேற்காக நிறுத்தியிருந்தது.
இப்போது புதுக்குடியிருப்புக்குத் தெற்காக 53ஆவது டிவிசன், அதிரடிப்படை8, அதிரடிப் படை4, ஆகியனவும் அதற்கு அப்பால் புதுக் குடியிருப்புக்கு மேற்கே அதிரடிப்படை2, அதிரடிப்படை3, ஆகியனவும் செயற்பட்டு வருகின்றன.
அதேவேளை 57ஆவது டிவிசன் ஒதுக்குப் படையாக விசுவமடுப் பகுதியில் நிற்கிறது.
புதுக்குடியிருப்புக்கு தெற்கே 53 ஆவது டிவிசன் 800 மீற்றர் தொலைவில நிற்பதாகவும், அதிரடிப்படை4.4 கி.மீ மேற்கே நிலைகொண்டிருப்பதாகவும் படைத்தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மை யாக மக்கள் இன்னமும் வசிப்பதாக அறியப் படுகின்றது. இந்தளவுக்கு நெருக்கமாகப் படை யினர் முன்னேறி நிலைகொண்டிருந்தால் அந் தப் பகுதியில் மக்கள் வாழ்வது நிச்சயம் சாத் தியமற்றதாகவே இருந்திருக்கும்.
இராணுவத்தினர் அதிகளவிலான படைக ளைக் களமிறக்கியிருக்கின்ற இந்தப் போர்க் களம் இலங்கை இராணுவத்துக்கும் சரி புலிக ளுக்கும் சரி இதுவரை சந்தித்திராத அனுபவங் களைக் கொடுத்திருக்கி றது.
காரணம், இதற்கு முன்னர் படைத்தரப்பு இந்தளவு படைப்பிரிவு களை, படையினரை, ஆயுதங்களைப் பயன் படுத்தி எந்தவொரு தாக்குதலையும் நடத்தி யதில்லை.
அதுபோன்றே புலி களும் இப்படியான தொரு சமரை எதிர் கொண்டதில்லை.
நாளுக்கு நாள் இந் தப் போர்களம் சுருக்க மடைந்து வருகிறது. இப்போது புலிகளிடம் 100 சதுர கி.மீ பரப்பள வான பிரதேசம் கூட இல்லை என்று படைத் தரப்பு கூறுகின்றது.
ஆனாலும் சண்டைக ளின் தீவிரம் குறைந்த தாகத் தெரியவில்லை. கடந்த வார நடுப்பகுதி யில் இரண்டு நாட்கள் நடந்த சண்டைகளில் மட்டும் 25 படையினர் கொல்லப்பட்டதாக வும், 175 பேர் வரை காயமுற்றதாகவும் பாதுகாப்பு வட்டாரங்க ளுடன் தொடர்புடைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதை உறுதிப்படடுத்தும் வகையில் கடந்த வாரம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றொரு தகவலை வெளியிட்டிருந்தார்.
கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 1000 படை யினர் காயமடைந்திருப்பதாக அவர் கூறியிருந் தார். இது புலிகளின் எதிர்ப்பு சற்றும் குறைய வில்லை என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது.
அரசாங்கம் சண்டைகளில் கொல்லப்படும் காயமடையும் படையினரின் விபரங்களை வெளியிடாமல் இருக்கின்ற நிலையில் சண் டைகளில் ஏற்படும் இழப்புகளை நீண்டகாலத் துக்கு மறைக்க முடியாது.
இராணுவத்தின் அதிகளவிலான படைப்பிரி வுகள் குவிக்கப்பட்டு சிறப்புப் பயிற்சி பெற்ற படையினரைக் களம் இறக்கிய போதும் புலிக ளின் எதிர்ப்பு குறையாதிருக்கிறது.
அவர்களின் போரிடும் திறனில் பெரும் வீழ்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை.
அத்துடன் அண்மையில் நிகழ்ந்த சண்டை களில் புலிகள் தாராளமாகப் பயன்படுத்திய ஆயுதங்களைக் கொண்டு அவர்களிடம் போதியளவுக்கு ஆயுத தளபாடங்கள் இருப் பதை தெளிவாகவே உணர்ந்து கொள்ள முடிந் திருக்கிறது.
அத்துடன் புலிகளிடம் இருந்து பெருமள விலான ஆயுதங்களைக் கைப்பற்றியதாகப் படைதரப்பு வெளியிடும் தகவல்கள் அவர்கள் ஆயுத தளபாடப் பற்றாக்குறையைச் சந்திக்க வில்லை என்பதை உணர்த்துகிறது.
அதேவேளை அவர்கள் போரிடுவதற்குப் போதிய ஆளணியின்றி இருப்பதை வெளிப் படையாகவே ஒப்புக் கொண்டிருப்பதும் குறிப் பிடத்தக்கது.
இதற்கிடையே கடந்த வாரம் ஒட்டுசுட்டா னுக்கு தெற்கே 533 பிரிகேட் துருப்புகளுக் கும் புலிகளின் குழுவொன்றுக்கும் இடையில் சண்டை நடந்திருக்கிறது. இது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாகும்.
இந்தச் சண்டையில் புலிகள் 3 பேர் கொல் லப்பட்டதுடன் படையினர் சிலர் காயமுற்ற தாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளி யிட்டன.
கொல்லப்பட்டவர்கள் கரும்புலிகள் அணி யைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. அவர்களிடம் இருந்த தற்கொலைக் குண்டு அங்கிகள் மற்றும் ஆயுதங்கள் கரும்புலித் தாக்குதலுக்காக இவர்கள் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இப்போது அடிக்கடி இவ்வாறான மோதல்கள் நடைபெறுவது வழக்கமாகியிருக்கிறது.
அதைவிடப் புலிகள் இப்போது கரும்புலி களை சண்டைக் களங்களில் பயன்படுத்தி வரு வதால் படையினருக்கு சிக்கல்கள் ஏற் படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்தவாரம் உடையார்கட்டுக்கு வடக்கே நடந்த சண்டை யின் போது புலிகளின் உறுப்பினர் ஒருவர் முன்னேறிச் சென்ற 581பிரிகேட்டைச் சேர்ந்த 11வது இலகு காலாற்படையினர் மத்தியில் குண்டை வெடிக்க வைத்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் படையினர் உயிரிழந் தது பற்றிய தகவல்களை உறுதிப்படுத்த முடி யாவிட்டாலும் பலர் காயமுற்றதாகக் கூறப்பட் டிருக்கிறது. படைத்தரப்புக்கு இப்போதே கைப்பற்றிய பிரதேசங்களின் பாதுகாப்பு பற் றிய சிக்கல்கள் எழத் தொடங்கி விட்டன.
இந்தநிலையில் ஆளணி வளச் சிக்கலைச் சமாளிக்க ஓமந்தைப் பகுதி, மணலாறு மற்றும் பூந்தோட்டம் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் மேலதிகமாக நிறுத்தப்பட்டிருக் கின்றனர்.
இங்கு 24 முகாம்களை விசேட அதிரடிப் படை புதிதாக அமைத்திருக்கிறது.
ஒரு புறத்தில் தாக்குதல் சண்டைகள் புதுக் குடியிருப்புக் களமுனையில் தீவிரம் பெற்றி ருக்கின்ற நிலையில் படையினர் பின்புலத்தில் புலிகளின் சவால்களையும் சிக்கல்களையும் இப்போதே எதிர்“கொள்ளத் தொடங்கி விட்ட னர். புதுக்குடியிருப்பைக் கைப்பற்றினாலும் புலிகளின் இந்த ஊடுருவல் அணிகளின் நட வடிக்கைகள் அரசபடைகளுக்கு ஒரு நீண்ட கா லச் சிக்கலாகவே இருக்கும்
நன்றி : வீரகேசரி
முதல்வர் கருணாநிதியை விட்டு விடுங்கள்
உணர்ச்சி உள்ளவன் தான் மனிதன் . தனியே உணர்ச்சி வசப்படுதல் மட்டும் செய்பவனே தமிழன். உணர்ச்சி வசப்படுதலின் உச்சங்களான கண்ணீர் விடுதலும் காலில் விழுதலும் தன்னைத்தானே எரித்துக் கொள்ளலும் தமிழனுக்கே உரித்தான குணங்கள்.
"மாதமோ சித்திரை ..நேரமோ பத்தரை... மக்களோ நித்திரை ...' என்ற அடுக்கு மொழிகளை மாய்ந்து மாய்ந்து சொல்லி உருகிப்போனவர்கள் நாங்கள். உடன் பிறப்புகளின் உணர்ச்சிகளை உருவேற்றி உருவேற்றி களங்களை உருவாக்கி கலகங்களை நிகழ்வாக்கிய கரைவேட்டிகளை அரசியல் தலைமைகளாக உருவாக்கியதே உணர்ச்சியுள்ள தமிழனின் வெற்றிகள்.
நான், என் மதம் ,என் மொழி ,என் சாதி, என் இனம் ....எம் உணர்ச்சி வசப்படுதலுக்கு இன்னும் எத்தனையோ காரணங்கள் உண்டு . தேடித் தேடிக் காரணங்களைக்கண்டு பிடித்தலிலும் நாம் தான் கெட்டிக்காரர்களாச்சே.
"பாம்மையும் பாப்பானையும் கண்டால் ..பாப்பானை முதலில் அடி " என்று ஏன் ? எதற்கு? என்று காரணம் கேட்டத்தோன்றா வினை ஒன்றையே எதிர்பார்த்தவர்கள் நம் தலைவர்கள். பாப்பானின் உயர்வுக்குக் காரணம் கல்வியறிவு. அதில் அனைவரும் மேம்மட வேண்டுமென்ற தேவையை உணர்த்தும் போராட்டம் அவர்களுக்கு அவசியமாகப்படவில்லை.
அதே அரசியலை வழிபட்டவர்கள் பின் தொடர்ந்தவர்கள் உணர்ச்சிகளை உருவேத்தி உருவேத்தி உருவாக்கிய வையே கழக கட்சி குழு அரசியல். இந்த உணர்ச்சிக்குவியலில் உள்வாங்கப்பட்டு இன்றும் (ஐம்பது அறுபது வருடங்கள் இருக்குமா..?) நமக்குள் குத்து வெட்டுகள்.
இவைக்கப்பாலும் உலகம் விரிந்திருக்கின்றது , வேறு வித அரசியல் சமூக கட்டமைப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்திருந்தும் திருந்த விரும்பாத மனோபாவம் பிடித்த நோயாளிகளாகவே நாம் இருக்கின்றோம். ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதிலும் அடித்துக் கொள்ளு(ல்லு)வதிலும் கேள்வி கேட்காது அடி தொழுவதிலும் உணர்ச்சி வசப்படும் எம் தமிழினத்தை அடித்துக்கொள்வதில் ஆளே கிடையாது.
இதனைப்புரிந்து கொண்ட சாணக்கியத்தாலோ அல்லது இதே உணர்ச்சிக்குழப்ப அரசியலில் இருந்து முளைத்ததனாலேயோ என்னவோ முதல்வர் கருணாநிதி அவர்களும் அவ்வாறு இயங்குவது அவர் தவறு மட்டுமா? அவரை வளர்த்து விட்டதும் வளரவிட்டதும் உணர்ச்சிக்குழம்புகளான நாம் தானே.
முதல்வரின் தேவை ஒரு அரசியல் தலவனாக ஆட்சித்தலைவனாக வேண்டும் என்பதுதானே. நமக்கெல்லாம் இருக்கும் ஆசைகளைப்போல அவருக்கும் இருந்ததில் என்ன தவறு?
அவராக விரும்பிக் கேட்டா நாம் அவரை உலகத்தமிழினத்தலைவராக்கினோம். நம் உணர்ச்சிக் கண்மணிகள் உசுப்பேத்தி விட புகழுக்கு மயங்காத மனிதன் யாருண்டு. நாம் கொடுத்ததை அவர் வைத்திருக்கின்றார்.
ஒரு நாட்டின் மானில அரசியல் கட்சித்தலைவர் எப்படி உலகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியும் என்று உணர்ச்சிவசப்படும் மண்ணாங்கட்டிகளான நமக்குத்தெரியவில்லையே.. அது அப்படியிருக்க அவரை உலகத் தமிழ் தலைவராக வலிந்து கற்பிதம் செய்து விட்டு நாம் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லாது போய்விட்டது.
சென்னையில் மழை பெய்தால் மதுரையில் வெயில் கொளுத்தினால் ஒரு குடை கேட்பதை விட்டு விட்டு எங்கோ ஒரு மூலையில் அடிபட்டுச் சாகும் தமிழனுக்காக அவரை "அதைச் செய் இதைச் செய் " என்று துன்பப் படுத்துவது எவ்விதத்தில் நியாயம். அவரால் முடியாது என்பதும் அவரின் அதிகாரங்களும் ஆசையும் ஆட்சியும் இடம் கொடுக்காது என்பதும் தெரிந்து கொண்டே உணர்ச்சி வசப்படுவதும் வசை பாடுவதும் பஸ்ஸைக்கல்லால் அடிப்பதுவும் கொடும்பாவியைக் கொளுத்துவதும்.. என்ன இது.. கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தில் தோன்றிய மூத்த குடி இன்னும் அங்கேயா நின்று கொண்டிருக்கின்றது.
மக்கள் போராட்டங்களும் வெற்றிகளும் அதே மக்களாலேயே உருவாக்கப்பட வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் வெற்றிகளை உருவாக்கவோ தீர்மானிக்கவோ முதல்வர் கருணாநிதியால் முடியவே முடியாது. அவர்கள் தேவையும் களமும் வேறு. இவர் களமும் தேவையும் வேறு.
அவர் தன் ஆட்சி போதையையும் தன் வாரிசுகளின் வருங்காலத்தையும் ஸ்திரப்படுத்துவதில் என்ன தவறு. நாமெல்லாம் நம் குடும்பம் குட்டிகள் என்று இருப்பதைப் போலவே அவரும் இருக்க முயலுகின்றார். அவரைத் தூக்கி வைத்திருப்பவர்களும் தூக்கி எறியக் கூடியவர்களும் தமிழ் நாட்டு மக்களே.
தமிழ் நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளாலும் மேலான கடமைகளாலும் உருவாக்கப்பட்டவர்களே முதல்வர் கருணாநிதி ஜெயலலிதா சுப்பிரமணிய சுவாமி சிதம்பரம் போன்றவர்கள். தங்களைக்காப்பாற்றுவதற்கும் தலையில் மிளகாய் அரைத்துக் கொள்வதற்கும் அனுமதி அளித்தவர்களும் தமிழக மக்களே. அவர்கள் வேலையை அம்மக்களே பார்த்துக் கொள்வார்கள்.
ஆகவே அவரை தயவு செய்து விட்டுவிடுங்கள். அவர் நன்மைக்கோ தவறுகளுக்கோ அனுபவிக்கப் போபவர்கள் அவர் வாரிசுகளே. அதை அறிந்து கொள்ள நமக்கு அதிக காலமும் தேவைப்பட மாட்டாது.
எனவே அபரிமித உணர்ச்சி வசப்படுதலை முதலில் விட்டொழிப்போம்.அறிவு பூர்வமாகச் சிந்திப்போம். மக்களால் உருவாக்கப்படும் போராட்டங்களைத் தலைமை தாங்க அரசியல் வாதிகள் தேவையில்லை. அவர்களைத் தேடாதீர்கள்.பொருத்தமற்றவர்களையெல்லாம் மக்கள் தலைகளில் பொருத்திப்பார்க்காதீர்கள். மக்களிலிருந்தே சரியான தலைமைகள் உருவாகும். மக்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள். தற்போதைய உலக ஒழுங்கு பொருளாதார நலன்களின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. அதனைப் புரிந்து கொண்டு அவ்வகை முன்னேற்றத்தில் கவனம் செய்வோம். இஸ்ரேலியர்களிடம் இருந்த அளவுக்கதிகமான செல்வம் அவர்களுக்கு ஒரு நாட்டையே வாங்கிகொடுத்தது. அது சரியாயினும் பிழையாயினும் ...அதுவே உண்மை.
புலிகளைப் பின் பற்றுவோரும் அவர்களை வழி மறிப்போரும் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் கருத்துகளை வரித்துக் கொள்ளவோ அரசியல் புலமையையை மெச்சிக்கொள்ளவோ துன்பத்தில் சாகும் மக்கள் யாருக்கும் சம்மதமில்லை. அவர்கள் தங்கள் உயிர் காத்தலுக்கான உபாயங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றார்களேயன்றி உங்கள் உளறல்களைக்கேட்டுக்கொண்டிருக்கவில்லை.
அவர்களுக்குத் தேவை அறிவு பூர்வமான வழிகாட்டுதல். பொருளாதார வெற்றி .அதனால் தொடரும் விடுதலை .. சுதந்திரம்.
Subscribe to:
Posts (Atom)