Sunday, February 03, 2008

அலையடிச்சு ஓஞ்சிருச்சு

தமிழ் மணத்தில் வீசிய புயல் கரை கடந்து சென்று விட்ட ஒரு அமைதி நிலவுகின்றது. சமயத்தில் இந்த அமைதியைப்பார்க்கும் போது பயமாகவும் இருக்கின்றது. புயலுக்கு முன்னால் தோன்றும் அமைதியைப் போல சற்று விகாரமாக நெளிந்து கொண்டிருக்கின்றது.

எது எப்படியோ, காமாந்தரச் சொற்களின் கட்டற்ற உடைப்பு சற்றுத் தணிந்திருக்கின்றது. பச்சை பச்சையாக எழுதத் துணிந்த போக்கு குறைந்திருக்கின்றது

எழுத்துச் சுதந்திரம் பற்றியோ, பெண்ணுரிமை பற்றியோ யாரும் இங்கு குறை கூறவில்லை. பாவிக்கப்படும் சொற்கள் பற்றியும் பாவித்ததன் நோக்கம் உடனடி விளம்பரம் என்பதுவுமே இங்கு கண்டனத்திற்கு உள்ளாக்கப் பட்டது. மற்றும் படி இங்கு (இந்த சமூகத்தில்) ஆணாதிக்கம் இல்லையென்றோ பெண்கள் 100 சதவிகிதம் மதிக்கப்பட்டு சரிசமமாக நடாத்தப் படுகின்றார்கள் என்றோ நான் கூறமாட்டேன்.

பெண்களின் வேதனையும் விசும்பலும் என் வீட்டிலேயே இன்னும் தீர்க்கப்படவில்லை என்று தான் சொல்வேன். அதற்கு சில மனத்தடைகளும் சமூகத்தடைகளும் காரணமாய் இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது..

இவைகளை எவ்வாறு உடைத்து வெளிவருவதென்பது பெண்களைப்போலவே பல ஆண்களுக்கும் இன்னும் புரியாத புதிராகவே இருந்து கொண்டிருக்கின்றது. பெண்களுக்கு சம உரிமை தரப்படவில்லை என்று கூக்குரல் இடும் பெண்களே இங்கு இன்னும் பல ஆண்களும் சம உரிமை பெறாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பல சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் சாதி மத நிற வேறுபாடுகள் என்று பல துணைக்காரணிகள் இங்கு காட்டப்படுகின்றன. சம உரிமை மறுக்கப்படும் அதே ஆண்களே தாம் சார்ந்த பெண்களுக்கு அநீதி விழைவிப்பதையும் காண்கின்றோம்.

உறுப்புகளின் பெயர்களை உரக்கக் கூவுவதோ உடைகளின் அளவை சுருக்குவதோ பெண் விடுதலை ஆகாது. அதைச் செய்ய முனைந்த சில விளம்பரப்பிரியர்களைக் கருத்தில் கொண்டே தமிழ் மணத்தில் எதிர்ப்புக் குரல் எழுந்திருந்தது.

மற்றும்படி ஒரு சிலர் கூறுவதைப் போல யோனி ,ஆண்குறி என்ற சொற்பதங்களை பாவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்பதுபோல் விளங்கிக் கொண்டு இதிகாசங்களையும் இலக்கியங்களையும் துணைக்கு இழுத்துக் கொண்டு வரத்தலைப்பட்டனர்.

சொற்கள் என்பது பொருட்களையோ செயல்களையோ விளங்கிக் கொள்ள உருவாக்கப்பட்டது தான். திறந்த மனதுடனான விவாதங்களுக்கு பொருள் கூட்ட சொற்களோடு சொற்களாக இவை பாவிக்கப்படுவதில் தவறு கிடையாது.

ஆனால் இச்சொற்களைச் சொல்லுவதற்காகவே/அதில் உள்ள வக்கிர எண்ணங்களுக்காகவே திரும்பத் திரும்ப சொல்லப்படுதல் ஆரோக்கியமானதாகாது. அத்தகைய ஒரு நோக்கம் விளம்பரப்படுத்தலேயன்றி வேறல்ல. கிளம்பிய எதிர்ப்பும் அதற்காகவே அமைந்தது.

மற்றும் படி யாரையும் மனம் நோகச் செய்யவோ இழிவு படுத்தவோ வேண்டுமென்ற நோக்கம் இந்த விவாதங்களில் கலந்து கொண்ட யாருக்கும் இருந்திருக்கும் என்று தோன்றவில்லை.

சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம் தமிழ் மணத்தில் என்றும் இருக்கவேண்டுமென்பதே நமது எண்ணம். அதுவே சமூக குறைபாடுகளை தீர்த்து வைக்க உதவும் என்பதுடன் தமிழ் மணம் பக்கம் வர பலருக்கும் உந்துதலாகவும் இருக்கும்
என்றும் நம்புகின்றேன்..

No comments: