Thursday, February 07, 2008

இந்தியப் படைகள் ஏன் வந்தன...? -2


வல்வைப் படுகொலைகள்.
------------------------------------

'மிஸ்டர் மேனன்!... ஒரு நகரத்தை இவ்வளவு மோசமாகத் தாக்கி, வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து நோயாளிகளைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியிருக்கிறீர்... உம்முடைய செயல் எங்களுடைய நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டது... இங்கு இருக்கின்ற பிரஜைகள் குழுவிடம் முதலில் நீர்மன்னிப்புக் கேட்க வேண்டும்...." ஊறணி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நின்ற பிரிகேடியர் சமேராம், மிகவும் கடுப்பாக நின்றமை கப்டன் மேனனை நிலைகுலையச் செய்துவிட்டது. 1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி வல்வெட்டித்துறை, ஊறணி வைத்திய சாலையில் வெறியாட்டம் ஆடிய இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குத் தலைமை தாங்கிய கப்டன் கோபாலகிருஷ்ண மேனன் அன்று தனது உயர் அதிகாரி பிரிகேடியர் சமேராம் முன்னால் தலைகுனிந்து கூனிக்குறுகி நின்ற போதே என்றோ ஒருநாள் இந்த வல்வெட்டித்துறைக் கிராமத்தை அழிக்கவேண்டும்" என்று சபதம் எடுத்திருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறைப் படுகொலைகள் இடம்பெற்று முடிந்தன. 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 2ஆம் நாள் ஊரிக்காடு இந்திய இராணுவ முகாமில் இருந்தும், பொலிகண்டி இராணுவ முகாமில் இருந்தும் வெளியேறிய இந்திய ஆக்கிரமிப்பு இராணுவக்கும்பலுக்குத் தலைமை வசித்தவர்களில் கப்டன் மேனன், கப்டன் கபூர் முக்கியமானவர்களாக இருந்தனர். ஆம்! கப்டன் மேனன் பழிவாங்கும் ஒருகளமாக அன்று வல்வெட்டித்துறையைக் குறிவைத்துச் செயற்பட்டான். அவனுடன் ஊரிக்காடு இராணுவ முகாம் பொறுப்பாளராக இருந்த மேஜர் சுதர்சன் சிங் தலைமையில் ஏ வடிவ வியூகம் அமைத்து விடுதலைப் புலிப் போராளிகளைக் குறிவைத்து நகர்ந்தபோதே இராணுவத்தினருடனான மோதல் ஆரம்பமானது. வடமராட்சியின் ஏனைய பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் தாக்கப்பட்டபோது உடுப்பிட்டி இராணுவ முகாம் கேணல் சர்மா அன்று வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழுவினு}டாக வடமராட்சிப் பொறுப்பாளர் மேஜர் ஜேம்சுடன் செய்து கொண்ட கனவான் ஒப்பந்தத்திற்கு அமைவாக அங்கே இந்தியச் சிப்பாய்கள் தாக்கப்படாமல் இருந்தார்கள் என்ற உண்மை வெளியுலகத்திற்கு அன்று தெரியாது. அந்தக் கனவான் ஒப்பந்தத்தை மீறும் வகையில் விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் செயற்பட்ட சீக்கியப்படைகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே அன்று அவர்கள் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அன்று ஒன்பது சீக்கியச்சிப்பாய்கள் கொல்லப்பட்டது இந்திய ஆக்கிரமிப்பாளருக்குப் பேரதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அதன் விளைவு!... வெறிகொண்ட இந்தியப்படைகள் ஓகஸ்ட் திங்கள் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் வல்வெட்டித்துறை நகரத்தையும் அயல் ஊர்களையும் சுற்றிவளைத்து ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு ஆடிய வெறியாட்டத்தில் நேர்ந்த 'வல்வெட்டித்துறைப் படுகொலைகள்" வரலாற்றில் இந்தியருக்குக் கறைபடிந்த செய்தியாக இன்றும் நிலைத்துவிட்டது. அமெரிக்க இராணுவத்தினரின் வெறியாட்டத்திற்கு ஆளாகிய வியட்நாமின் மைலாய் படுகொலை போல் பிரித்தானிய இராணுவத்தினருக்கு இந்தியாவின் 'ஜாலியன் வாலா பாக்" படுகொலை போன்று இந்தியாவுக்கு ஒரு வல்வைப் படுகொலை களங்கம் சேர்த்துவிட்ட வரலாறாகிவிட்டது. ஆம், அந்தப் படுகொலையின் விளைவாக 63 அப்பாவிப் பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், வயோதிபர் என்ற பேதமின்றி வெட்டப்பட்டும், சுடப்பட்டும், எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டனர். நூற்றுக்கதிகமானோர் காயப்படுத்தப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகளும், கடைகளும் எரிக்கப்பட்டன. 15 திருமணமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட஼br />br />ர். 50இற்கும் அதிகமான இளம்பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். பல இந்துக்கோயில்கள் சேதமாக்கப்பட்டன. இவ்வளவும் செய்துமுடித்த இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பிப் படுகொலைகள் நிகழ்த்துவதற்குக் காரணமாக இருந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் அந்த ஓகஸ்ட் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் எப்படி நிம்மதியாக உறங்கியிருக்க முடியும்? அந்த அழியா நினைவுகள் - மறக்கமுடியாத அவலங்களை விதைத்துச்சென்ற கொடூரமான இந்திய இராணுவத்தையும் இந்திய அரசையும் துயரின் விளிம்பில் உழன்றுகொண்டிருக்கும் வல்வை மக்களால் எப்படி மறக்க முடியும்?... எப்படி மன்னிக்கமுடியும்? அந்த நிலையிலும், இந்தியாவைத் தாய் நாடு என்று ஒரு காலத்தில் நம்பி இந்திய விசுவாசிகளாக இருந்து இந்தியர்களால் முதுகில் குத்தப்பட்ட இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களில் ஒருசில ஆயிரமாக இருந்து கண்ணீர் விடுவதைத் தவிர விடுதலை வேள்விக்கு ஆயிரக்கணக்கான உயிர்களை ஆகுதியாக்கிய வல்வெட்டித்துறை மக்களால் வேறு எதைத் தான் செய்யமுடியும்? ஆனால், எமது நெஞ்சில் துயரங்களை விதைத்துச்சென்ற அந்தத் துன்பியல் நாள்களை நினைவு கூரும் ஓகஸ்ட் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளையும் ஈழத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் நிகழ்த்தப்படுவதற்குக் காரணமாகவும் பொறுப்பாகவும் இருந்த ராஜீவ் காந்தியையும் நிம்மதியான ஒரு நிரந்தரத் தீர்வுக்குத் தடையாக இருக்கும் இந்தியாவையும் எப்படி வல்வெட்டித்துறை மக்களால் மறக்கமுடியும். இன்றும் அந்த நினைவுடன் வாழும் நாம் அனைவரும் அன்று இந்தியர்களால் கொல்லப்பட்ட எம்மவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போமாக.

புதினம்
Rajiv Gandhi's War Crimes '87 to '90

http://www.tamilnation.org/intframe/india/warcrimes/index.htm

http://www.tchr.net/reports_commission_IPKF.htm

No comments: