இது என்ன கேள்வி என்று ஆச்சரியத்தில் விழியுயர்த்தப் பலர் முற்படக் கூடும். இல்லை என்று பலர் மறுதலிக்க முற்படும் வேளையிலும் ஆம் இதுவும் நடக்கக் கூடிய து சாத்தியமே. இவையெல்லாவற்றையும் விளங்கிக் கொள்ள இன்றைய உலக அரசியல் பொருளாதார இயங்கு தளத்தையும் திசையையும் புரிந்து கொள்ளுதல் பயன் தரும்.
பொருளாதார முன்னேற்றம் அல்லது கையகப்படுத்தல் அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ஆக்கிரமிப்பு என்னும் அடிப்படையிலேயே இன்றைய உலகம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வாக்கிரமிப்பின் முதல் தேவையே கட்டில்லா தொடர்பாடல் (ஆக்கிரமிப்பில் போட்டி போடும் பெரும் உற்பத்தி நிறுவனங்களுக்கு). அதற்கான வேலைத்திட்டங்களின் மீதே அரசியல் செயற்பாடுகள் செயற்படுத்தப்படுகின்றன. அவையே இன்றைய உலக ஒழுங்கை வடிவமைக்கின்றன. அவற்றையே இன்றைய உலகின் அதி நவீனப் பெரும் பொருளாதார வளர்ச்சி பெற்ற ஜீ -8 நாடுகளின் பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்கள் வேண்டி நிற்கின்றன.
இன்னும் பல காலத்திற்கு (எவ்வளவு காலத்திற்கு என்னும் தெளிவில்லாவிட்டாலும்) இந்நிலையே தொடரப்போகின்றது. கம்யூனிஸம் காலங்கடந்ததன் பின்னால் இக்கருது கோளிற்கு மாற்றீடு எதுவுமில்லா இக்காலத்தில் உலகம் இவ்வாறு கட்டுண்டுகிடத்தலும் பின் செல்லலும் தவிர்க்க முடியாதவையே. கடந்த கால கம்யூனிஸப்பாசறைக்குள் மூழ்கிக்கிடந்த நாடுகளும் சுலபமாகத்தம்மை சுதாகரித்துக்கொண்டு இவ்வொழுங்கோட்டத்தில் தம்மைக்கரைத்துக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையே இதற்கான சான்றாகும்.
இன்று தன்னளவில் தன் பிராந்தியத்தில் கிடைக்கக் கூடிய அனைத்து வளங்களையும் கையகப்படுத்தும் போராட்டத்தையே தமது அரசியலாக்கி அவ்வராஜக அரசியலையடைய இராணுவ முஷ்டியை உயர்த்தும் மனப்போக்கிலேயே அனைத்து அரச இயந்திரங்களும் இப் பெரும் பொருள் ஆக்கிரமிப்பு நிறுவனங்களால் வழி நடாத்தப்படுகின்றன. இந்நிறுவனங்களின் கைகள் மொழி இன தேச வர்த்தமானங்களையும் தாண்டி சர்வதேசத்தின் கரைகள் வரை நீண்டு கொண்டிருக்கின்றன.
இந்த யதார்த்தத்தை மீறி இன்று உலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இன மத மொழிப் போரை நடாத்திக் கொண்டிருக்கின்ற எவ்வினமோ மக்களோ வெற்றியடைய முடியாது. எத்தனை வீரியம் பெற்ற போராட்டத்தையும் சாம தான பேத தண்ட முறைகளில் நசுக்கி விடக்கூடிய தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் முதல் மனித நேயக்காப்பு நிறுவனங்கள் ஈறாக தனி மனித குழு அமைப்பு ரீதியான் பல்வேறு கட்டமைப்புகளை அவை கட்டமைத்து வைத்திருக்கின்றன.
தமது தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் கருத்தியல் ரீதியான பிறழ்வுகளையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அவை திறமையாகச் செயற்படுகின்றன. அதையும் மீறி எதிர்த்து நிற்கும் சிறு குழுக்களைப் பயங்கரவாதிகளாக முலாமிட்டு ஈவிரக்கமற்ற கொலைவெறிக்கரங்களால் அடக்கவும் முற்படுகின்றன..அதில் வெற்றியும் பெற்று விடுகின்றன. அல்லது வெற்றியாக்குவதற்கான முயற்சியில் மீண்டும் மீண்டும் அடக்கு முறையில் ஈடுபட்டு இரத்த ஆறுகள் காய்ந்து போகவிடாது காத்துக்கொள்கின்றன.
இதுவே உலக யதார்த்தமும் ஒழுங்குமாயிருக்கையில் ஈழத்தமிழினத்தின் சுதந்திரம் வேண்டிய போராட்டம் என்பது இவ்வல்லாதிக்கக் கனவுகளுடன் விரிந்து கொண்டிருக்கும் வல்லரசு பிராந்திய நலன்களுடன் எவ்வாறு ஒத்துப்போக முடியும். இவ்வகையான பிராந்திய இன மதக்கிளர்ச்சிகளை அவர்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாத வெறுப்புடனேயே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்போராடும் இனத்திற்கிடையிளுள்ள முரண்பாடுகளைக்கூர் தீட்டி வளர்த்து விடுவதிலும் பலவீனங்களைப்பயன் படுத்துவதிலும் திறமையுடன் காய் நகர்த்தி தங்களுக்கு ஏற்புடை ய நிலையக்கொண்டு வருதிலேயே குறியாயிருப்பார்கள்.
இதற்கு அப்பால் இருக்கக்கூடிய நியாயாதிக்கம் பற்றியோ மனிதாபிமானம் பற்றியோ அவர்களுக்கு எவ்வித கரிசனையும் இருக்கப்போவதில்லை. இன்று ஈழப்போராட்டத்தில் புலிகளின் பங்களிப்பு நூறுவீத மக்களையும் உள்ளடக்கியதாக இல்லை என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கின்றோம். இராணுவ முன்னெடுப்புகளுடன் கூடிய போராட்டத்தில் இந்நிலமை சாத்தியமே என்றாலும் அதற்கப்பால் இருக்கின்ற மக்கள் ஒன்றிணைப்பு பற்றி அவர்கள் என்றுமே கருத்துச் செலுத்தவில்லை என்பதே யதார்த்தம். முஷ்டி பலத்தை நம்பிய அளவு மக்கள் பலத்தையோ அரசியல் ராஜதந்திர முன்னெடுப்புகளையோ அவர்கள் செயற்படுத்தவில்லை என்பதே உண்மை.
மூன்று தசாப்தங்களையும் கடந்து விட்ட இப்போராட்டத்தினை வலுச்சேர்க்க இது வரை எந்த ஒரு நாடும் வெளிப்படையாக முன்வரவில்லை என்பதிலிருந்தே இவர்களின் இராஜ தந்திர கொள்கைத் தோல்வியைப்புரிந்து கொள்ளலாம். அதே போல போராட்டத்தினைத் தவிர்த்து அல்லது தவிர்க்க வைக்கப்பட்டு வெளிநடப்பு செய்துள்ள மண்ணின் மைந்தர்களின் விகிதாசாரமும் அதிக அளவில் இருப்பதும் இதனைத் தெளிபு படுத்தும்.
இவற்றை மனதில் கொள்வதன் மூலமே புலிகள் அல்லது ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய எவரும் வருங்கால நிகழ்ச்சி நிரலைப் பட்டியல் இடக்கூடும். எதிர்காலத்திட்டம் எவ்வாறு இருந்தபோதிலும் இன்று ஈழத் தமிழினத்தினதும் அதன் காவலர்கள் என கொள்ளப்படுபவர்களினதும் நிலை எவ்வாறு இருக்கப்போகின்றது.
சிங்கள ஏகாதிபத்தியத்தின் இனப்படு கொலைகள் இன்று உச்சத்தில் இருக்கின்ற வேளையிலும் உலகத்தமிழினம் கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கும் நிலையிலும் உலக நாடுகளின் மெத்தனப்போக்கை மட்டும் குறை கூறிக்கொண்டிருப்பதில் என்ன பயன் இருக்க முடியும்.உலகம் இவ்வாறு தான் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ளாதது ஏன்?. ஈழத் தமிழினத்தின் கரிசனைக்கு அப்பாலும் புலிகளை வேறுபடுத்திப்பார்க்கும் சர்வதேசத்தின் போக்கைப்புரிந்து கொண்டு செயலாற்றாத கையாலாகாத்தனம் யாருடைய தவறு.
புலிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரவேற்கப்பட்ட இணைத்தலைமை நாடுகளின் கபடத்தன்மை புரிந்து கொள்ளப்பட்டிருந்தால்... எடுக்கப்பட்ட மாற்று வழி இன்று தமிழ் மக்களை ஏன் காப்பாற்றவில்லை.
புலி ஒழிப்பு என்ற போர்வையில் ஈழத்தமிழினம் ஒழிக்கப்படுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்..? அதேபோல ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழினம் பற்றிய புலிகளின் கரிசனை எவ்வாறு இருக்கின்றது..?
தமிழ் மக்களைக் காப்பதற்காகவே எனச்சொல்லிக் கொண்டு படை நடாத்தும் புலிகள்..... நாளை ஐ.நா பாதுகாப்புப் படை ஈழத்தமிழ் மக்களைக் காப்பற்காக ஈழ மண்ணிற்கு வந்தால் புலிகளின் நிலை என்னவாக இருக்கும்..?
அரசியல் மயப்படுத்தப்படாத தனி இராணுவ முனைப்புடைய ஒரு இயக்கத்திடம் இவ்வாறான கேள்விகள் கேட்கப்படாது என்பதில் எவ்வித உறுதியும் கூற முடியாது.
பாதுகாப்புப்படையாக வந்த இந்தியாவின் சிங்கள அரசிற்குத் துணை போகும் இன்றைய நிலமைக்கு இந்தியாவின் பிராந்திய ஆக்கிரமிப்பிற்கு அப்பாற்பட்ட காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா? இதை முறியடிக்கும் உபாயம் ஏதாவது புலிகளிடம் இருக்கின்றதா...?
இவ்வகையான பல கேள்விகளுக்குப் புலிகள் மட்டுமல்ல ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுவதாக யார் கூறிக்கொண்டாலும் ...பதில்கள் இல்லாது விடின் இது அவர்களின் முடிவு காலமாயிருப்பதைத் தவிர்க்க முடியாது.