Thursday, April 02, 2009

மாடம் கிளாரிக்கு ஒரு பகிரங்க கடிதம்


மாடம் கிளாரி!

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில், அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதி மேரி ஜோய் கில்ரோய் கடந்த மார்ச் 9ஆம் திகதி, உங்களிடம் கடிதம் மூலம் விளக்கம் கோரியிருந்தார்.

அதற்குப் பதில் அளித்த தாங்கள், "
இலங்கையில் நிரந்தர சமாதான தீர்வு ஏற்பட்டு அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஏற்படுவதையே அமெரிக்கா விரும்புவதாகக்" குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் நல்லெண்ணத்தை நாங்கள் வரவேற்கின்றோம்.

அனைத்துச் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு என்று மொட்டையாகச் சொன்னால் எப்படி ? தனியாகப் பிரிந்து செல்வதா? சமஷ்டி தீர்வா? அல்லது வெறும் மாகான சபைகளா? என்பதை வகை பிரித்துக்கூறக்கூடாதா?

ஏனெனில் தீர்வுகள் குறித்து நாம் பலமுறை திம்பு முதற்கொண்டு தாய்லாந்து டோக்கியோ ஈறாகப் பலமுறை பேசிவிட்டோம். பேசியதில் கண்டது எதுவுமேயில்லை. பேச்சு பேச்சைத்தொடர்ந்து யுத்தம். யுத்தத்தில் உயிர்களைத் தொலைக்கும் வேதனை. இதைத்தான் நாங்கள் இதுவரை கண்டு வந்துள்ளோம்.
இழப்புகள் எப்போதும் எங்களுக்குத்தான் .அந்த வேதனையில் தான் உங்களிடம் கேட்கின்றோம். உறுதியாக ஒன்றைக்கூறுங்கள். எங்களால் உடன்படமுடியுமா? இல்லையா?என்பதை நாங்கள் கூறுகின்றோம். திக்கில்லாத பேச்சு என்னும் காட்டில் அலைந்து விட்டு தீர்வில்லாது தொடங்கும் இன்னுமொரு யுத்தத்தில் உயிர்களைத் தொலைக்க எம்மிடம் அவ்வளவு உயிர்கள் இல்லை.

எத்தனை முறைதான் ஏமாறுவது?

"இலங்கை அரசாங்கத்திடம் சமாதான தீர்வை வலியுறுத்தும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளிடம், பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதியளிக்குமாறும், வன்முறைகளை நிறுத்துமாறும் கோரியுள்ளதாக " நீங்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

உங்கள் நகைச்சுவையுணர்வைப் புரிந்து கொள்ளும் திறன் எனக்கில்லை என்றே எண்ணுகின்றேன். இன்று போர் நடைபெற்றுக்கொண்டிருப்பது வன்னியில். போரை நடத்திக்கொண்டிருப்பது சிறிலங்கா இராணுவம். நீங்கள் என்ன சொல்லியிருக்க வேண்டும்? உடனடியாக போரை நிறுத்தி சமாதானத்தீர்வை வையுங்கள் என்று சிறிலங்கா அரசை வலியுறுத்தியிருந்தால் தமிழ் மக்கள் அனைவரும் உங்கள் நல்லெண்ணத்தைபுரிந்திருப்பார்கள்.

இதை விட்டு விட்டு தன்னைக்காத்துக்கொள்ளப்போராடும் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? அது என்ன? தக்குதலை முன்னெடுப்பவனை விட்டு விட்டு தாக்குதலால் பாதிக்கப்படுபவனை மட்டும் நிறுத்தச் சொல்லி கோசம் போடுகின்றீர்கள். தற்காத்துக் கொள்வது -நம் பெண்கள் பிள்ளைகளைக் காத்துக் கொள்வது-உங்கள் எண்ணப்படி வன்முறை செய்வதா?

நாங்கள் அத்தனை தூரம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டுமென நீங்கள் ஆசைப்பட்டது எப்படி? இரட்டைக்கோபுரத் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று ஆப்கானிஸ்தான் சென்று தாக்குதல் செய்து கொண்டிருப்பதுவும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் என்று ஈராக்கில் படை நடாத்தும் உதாரணமும் நீங்கள் உலகுக்கு வழங்கியதுதானே. ஆனால் நாங்கள் இன்னும் எங்கள் இடத்தை விட்டு சிங்கள ஊர்களுக்குச் சென்று சண்டையிடவில்லையே? அத்தனைதூரம் சகிப்புடன் இருக்கும் எங்கள் பொறுமையை நீங்கள் மெச்சக்கூடாதா?

"இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு, பொது மக்கள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும்
" கூறியிருக்கின்றீர்கள். உங்கள் இத்தனை வேலைபளுக்கள் மத்தியிலும் இலங்கையின் பாலும் தமிழ் மக்களின் மீதும் நீங்கள் கொண்ட கரிசனையை நாங்கள் மெச்சுகின்றோம்.

தீர்வு தான் கொடுக்கப்போகிறீர்களே? தாக்குதலை நிறுத்தச் சொல்லிச் சொல்லக்கூடாதா? அது என்ன பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தக்கூடாது என்பது? அவர்கள் எப்போதுதான் அப்படித் தாக்குதல் நடாத்தியிருக்கின்றார்கள்? நீங்கள் இப்படிக்கூறுவது சிங்கள அரசை நீங்கள் குற்றம் சொல்வதாக ஆகாதா? அப்படி நடாந்திருந்தால் சர்வதேச மனித நீதியின் மாண்புகள் நீங்கள் சும்மாயிருந்திருப்பீர்களா? சில நூறு மனிதர்கள் இரட்டைக்கோபுரத்துடன் இறந்ததற்காக படை நடாத்துபவர்கள் நீங்கள். பல ஆயிரம் மக்கள் இறந்தால் சும்மா இருப்பீர்களா?

"அமெரிக்க ராஜாங்க திணைக்களமும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து வன்னியில் போரினால் சிக்குண்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றன. "

அடடா.. இராணுவ உடையுடன் வன்னிக்காடுகளில் அலையும் வெள்ளை தோல் மனிதர்கள் இவர்கள் தானா? சிங்கள இராணுவத்திற்கு உதவி செய்பவர்கள் என்று நாங்கள் தவறாக எடை போட்டு விட்டோமே? இவர்கள் ஒன்றும் அரிசி மூட்டையையும் மாமூட்டையையும் காவி வந்ததை நாங்கள் பார்க்கவில்லையே. குண்டுகளைப் போட்டுத் துரத்துவதைத்தானே பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

எத்தனை பிஞ்சுக்குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் ஆண்களும் யுத்தக் காயத்தினாலும் உயிரைக் கொல்லும் பசியினாலும் இறந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இழுத்துப்போட்டு மண்மூடவே பலமுமின்றி இரண்டு சொட்டுக் கண்ணீர் விட்டு துயராற்ற நேரமுமின்றி ஓடிக்கொண்டிருக்கின்றோமே. எப்படி உங்களால் இப்படியெல்லாம் ..? துக்கமாக இருக்கின்றது.

"அத்துடன் இடம்பெயர்ந்தமக்களின் முகாம்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமையம் என்பவற்றின் முழுமை நிவாரணங்களையும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்
" இப்படியும் கூறியிருக்கின்றீர்கள்.

இந்த நேரத்தில் இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் அண்மையில் வெளியிட்ட கருத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இவ்விடம் பெயர்ந்த மக்களின் அவலம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு 'நலம் காக்கும் சிற்றூர்கள்' அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.

இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறு
கூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.

ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் ".

இது நாங்கள் கூறவில்லை கிளாரி அம்மையாரே! அன்னிய நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் கூறியது. சிங்கள அரசின் இடைத்தங்கல் முகாம்கள் பற்றி யும் நடவடிக்கைகள் பற்றியும் அவர் வெளிச்சம் போட்டுக்காட்டியது.

இப்படிப்பட்ட ஒரு கொலைக்களத்திற்கா எங்களைப்போகச் சொல்லி வற்புறுத்துகின்றீர்கள். ஈழத்தமிழ் மக்கள் உங்களிடம்கேட்பது பிச்சையல்ல , உயிர் வாழ்தலுக்கான உத்தரவாதம்.

அதே நேரம் உங்கள் பேச்சை சிறிலங்கா அரசு ஒன்றும் கேட்பது போலத் தோன்றவில்லையே. அது இப்படியொரு அறிக்கை விட்டிருக்கின்றதே.

"விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எந்த விதத்திலும் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை. ஒரு மணி நேரத்துக்கேனும் தற்காலிகமானதொரு போர் நிறுத்தத்தைக்கூட அரசாங்கம் மேற்கொள்ளாது" என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இப்போது நாங்கள் என்ன செய்வது அல்லது நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள் என்று இன்னுமொரு அறிக்கை விடுங்கள். நீங்கள் அறிக்கை விடுவதும் அதை நாங்கள் வாசிப்பதுவும் ,இப்படித்தானே காலம் போகின்றது.

இதில் என்ன துயரம் என்றால் உங்களுக்கு அது 4வருட விளையாட்டு. எங்களுக்கு ஆயுள் முழுவதற்குமான சீரழிவு..

வன்னியில் துயரப்படும் ஜீவன்.

மாடம் கிளாரியின் கடிதம்:http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=12512

No comments: