Wednesday, February 18, 2009

தாலி அறுக்கும் சோனியா


அன்னை சோனியாவின் இழப்பு எத்தனை பாரதூரமானது என்பதை உணரக் கூடியதாகவே இருக்கின்றது. அன்னை சோனியாவிற்கு மட்டுமல்ல எந்தப் பெண்ணிற்கும் முகவரியாய் இருக்கும் கணவனின் இழப்பு மிகக்கொடியதே..அன்பை பாசத்தைப்பகிர்ந்து கொள்ளும் இடம் வெறுமையாகிப் போவது மிகவும் துயரமானதே..அவரின் சோகம் ஆறுதல் படுத்த முடியாததே...
அவரின் தன்னிரக்கம் ( கணவனின் மரணம் குறித்தான ) கோபமாகவும் சில வேளைகளில் வெறுப்பாகவும் மாறக்கூடியது (தன் அன்புக்குரியவர்களின் இழப்பு இராஜீவின் மீதான வெறுப்பாகி தன்னையும் இராஜீவையும் அழித்துக்கொண்ட தனுவின் வெறுப்பைப்போல) புரிந்து கொள்ளப்படக்கூடியதே.

ஆனாலும் இவ்வெறுப்பானது ஒரு இனத்தின் மீதான வெறுப்பாகிப் போவது தான் துரதிஷ்டமானது. பிராந்திய வல்லரசுக்கனவுடன் இருக்கும் ஒரு நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பால் கிடைத்த வல்லமையை தன் சுய மனத்திருப்திக்காக துர்ப்பிரயோகம் செய்வது அதை விட துரதிர்ஷ்டமானது.

இன்று தம் பிள்ளைகளைப்பறி கொடுத்து தம் கணவரைப் புதைகுழியில் மூடி தாலி அறுத்து முடங்கிப் போகும் ஈழத்துப் பெண்களின் துயரமும் கோபமும் அத்தகையதே.

இராணுவ மேலாண்மையையும் ஆணவ அலட்டல் நிறைந்த வழிகாட்டுதல்களும் இன்று வன்னி மண்ணைச் சிவப்பாக்கிக் கொண்டிருக்கின்றது. இத்தனையையும் செய்து கொண்டிருப்பது அன்னை சோனியாவின் தனி மனித வெறுப்பும் மிஸ்டர் முகர்ஜி போன்றோரின் அடிவருடித்தனமுமே . சிங்களத்திற்கு கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்ப்பதுடன் அடிதடி சவடால்களையும் (புலிகள் பாதுகாப்புக் கேடயமாக வைத்திருக்கும் மக்களை விடுதலை செய்ய வேண்டும், ஆயுதங்களை கீழே போட வேண்டும் எக்ஸ்ஸெட்ரா) மிஸ்டர் முகர்ஜி ,சிதம்பரம் போன்றவர்கள் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆயுதம் வைத்திருப்பவர்களுடன் பேசவும் முடியாது..பிறரைப்பேசவும் சொல்லமுடியாது என்று சொல்கின்றார் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம். இதே காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் திம்புவில் இலங்கை அரசிற்கும் தமிழ் ஈழ இயக்கங்களுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது என்பதுவும் அதை வழி நடாத்தியதே இந்திய அரசுதான் என்பதையும் அவர் வசதியாக அல்லது வசதிக்காக மறந்து விட்டார். ஆனாலும் ஒரு உள்துறை அமைச்சருக்கு இத்தனை மறதி கூடாதுதான்.

வடக்கே சீனா நெருக்குகின்றது கிழக்கே பங்களாதேசமும் மேற்கே பாகிஸ்தானும் தூக்கத்தைத் தொலைய வைக்கின்றன என்று கூக்குரல் இடும் இந்திய இராஜதந்திரிகளே இன்றைய உங்கள் கொக்கரிப்புகள் நாளை தெற்கே காலை நீட்டி நிம்மதியாகத் தூங்கவும் விடாது செய்யும்.

அது விதி. நியூட்டனின் மூன்றாவது விதி.

"ஒவ்வொரு தாக்கத்திற்கும் அதற்குச் சமமானதும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு."

அனுபவத்தை உங்கள் நண்பர்களான அமெரிக்காவிடமும் இரஷியாவிடமும் கேட்டுப்பாருங்கள். இன்றைய அரசியல் வாதிகளின் தனி மனித காழ்ப்புகளும் அதீத சுய நம்பிக்கையும் நாளை கேடு சூழ வைக்கும். இரும்புக்கரம் கொண்டு மக்களை அடக்கி வைத்திருந்த இரஷியாவே உடைந்து போய்விட்ட பின் இலஞ்ச லாவண்யத்தால் ஒட்டுப்போட்டு வைக்கப்பட்டிருக்கும் இந்தியா ஒன்றும் பலம் வாய்ந்தது அல்ல.

இந்தியாவை இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் ஈழத்து மக்களே ..இந்தியா ஒன்றும் இரட்சகன் அல்ல. புலிகளின் தலைவரைத் தொலைக்கும் வரை இந்தியாவின் கரங்களில் இரத்தம் காய்ந்து விடப்போவதில்லை.

மெள்னமாக அழுவதை விட்டு வன்னிக்காட்டின் அவலங்களை வெளியுலகின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். நீங்கள் இது வரை சாதித்தவையே இன்று உலகின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கின்றது. அது தழுவியே இத்தனை அரசியல் நாடகமும் நீலிக்கண்ணீரும். அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும். நீங்கள் போராடுங்கள் உங்களை நம்பி. அதுவே அன்னை சோனியாவால் அறுக்கப்படும் தாலிகளைக்காப்பாற்றும்.

"வல்லன வாழும்" கூர்ப்புத்தத்துவம். வாழ்வதற்கு வழியா இல்லை பூமியில்.

2 comments:

Anonymous said...

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dFj060ecGG7N3b4P9Ei4d2g2h3cc2DpY2d436QV3b02ZLu3e

இட்டாலி வடை said...

//http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dFj060ecGG7N3b4P9Ei4d2g2h3cc2DpY2d436QV3//

மதம் பிடித்த யானை தான் போகும் வழி அறியாது. இப்போது இந்தியாவிற்கு மதம் பிடித்திருக்கின்றது.

எறும்புகளால் பாடம் படிக்கும் காலம் விரைவில் வரும்.

அன்றைய காஸ்மீர் என்ற எறும்பு இன்று மலையாகி இந்துயக் குரல்வளையை நசுக்குவது போல...

பாவம் அப்பாவி இந்திய மக்கள் தான் டெல்லியிலும் மும்பாயிலும் தம் குருதியைக் கொட்டி பாவங்களைக் கழுவுகின்றார்கள்.