Sunday, February 15, 2009
இந்தியாவிற்கு ஆப்படிக்கும் பாகிஸ்தான்...
26/11 ..இறுமாந்திருந்த இந்தியாவுக்கு விழுந்த மரண அடி. மரணித்துப்போன உயிர்களுக்காகவல்ல ...தன் பிராந்திய வல்லரசுக்கனவில் விழுந்த அடிக்காக அது உண்மையாகவே கவலைப்பட்டது. பாகிஸ்தானின் எல்லைகடந்த பயங்கரவாதம் பற்றி உலக நாடுகளின் அனுதாப அலையைப் பெற்றுக்கொள்வதற்காக ஓடி ஓடி உதவி கேட்டது.
உலக நாடுகளிடம் இருந்து கிடைத்ததென்னவோ சில பல கண்டனங்களும் அறிக்கைகளும் தான்.. இதற்கும் மேலாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி அண்டப்பிரசண்டன் புஸ்ஸின் செல்லப்பிள்ளையான பாகிஸ்தானை கடிந்து கொள்ள் யாருக்கும் துணிவில்லை. இது போன்ற ஒரு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டி விடும் துணிவு இந்தியாவிற்கு எப்போதும் இருக்கப்போவதில்லை. காஸ்மீர் சார்ந்த முஸ்லீம் அமைப்புகள் காஸ்மீரின் எல்லைகளைக் கடந்தும் இந்திய மண்ணில் இவ்வகை வன்முறைகளை பாகிஸ்தானின் தூண்டுதலால் நடாத்தத்துணியும் போது காஸ்மீரில் இந்துப்பண்டிட்களின் உரிமை பற்றி கதைக்கும் இந்தியாவிற்கும் ..இது ஒரு பொய்யானதேயென்றாலும் ஒரு காரணம் உண்டு.
எப்படியானதென்றால் இவ்வகையான எந்த இடையூறுகளும் அதிகப்பிரசங்கித் தனங்களும் இல்லாது தானும் தன் உரிமைப்பாடுகளும் பற்றிப் போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ் இனத்தின் போராட்டத்தை நசுக்க இந்தியா ஆயிரம் காரணம் சொல்லிக்கொண்டிருப்பதைப்போல.
பாகிஸ்தானுடனான போராட்டத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பதை இந்தியா தெரிந்து கொண்டிருக்கின்றது. அதே வேளை அவ்வகையான ஒரு போராட்டத்தில் (பின்னணியில் அமெரிக்கக் கரம் ) வெற்றி பெறும் நிகழ்தகவு பற்றியும் அது சந்தேகமே கொண்டிருக்கின்றது. அது எப்படியென்றால் 26/11 இன் பின்னான காலத்தில் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதல் நடாத்த வேண்டுமென்று எழுந்த குரல்கள் ஈனஸ்வரத்திலேயே அமுங்கிப் போய் விட்டதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
இதுவே ஒரு இலங்கையாகவோ மாலைதீவாகவோ இருந்தால் இந்தியாவின் ஜெற் விமானங்கள் சீறிப்பறந்து வித்தை காட்டியிருக்கும். சிங்களவனை பயங்காட்ட உணவுப்பொதி போட்டதெல்லாம் அதற்குள் மறந்து விடாது.
இந்தியாவின் சாணக்கிய மூளை பற்றிக்கொண்டிருந்த நம்பிக்கையாலோ அல்லது வேறு வழியில்லாததனாலோ என்னவோ இந்திய உள்துறை சுறுசுறுப்படைந்தது. சாணக்கியர்கள் சுற்றியிருந்து வியூகம் அமைக்க காகித்ப்போர் தொடங்கியது.
பாகிஸ்தானும் சளைக்கவில்லை. ஒரே கொடியில் பூத்த மலர்தானே. கையும் களவுமாக (பாகிஸ்தான் பிரஜை) பிடிபட்டிருக்க ஆதாரங்களைத் தேடித்தர இந்தியாவையே கேட்டுக்கொண்டிருந்தது. பிடிபட்ட அஜ்மல் தன் பிரஜையே இல்லை என்று அடித்துச் சொன்னது. போதாதற்கு எப்போதோ அஜ்மல் இறந்து விட்டதாக மரண அத்தாட்சிப்பத்திரம் செய்து ஒரு கிராம அதிகாரியை விட்டுப்படங் காட்டிக்கொண்டிருந்தது. இந்தியாவிற்கு இத்தனை தூரம் சகிப்புத்தன்மை பற்றிப்பாடம் புகட்டிக்கொண்டிருந்தது பாகிஸ்தான்.
அமெரிக்க ஜனாதிபதி மாற்றத்தைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானினதும் பாகிஸ்தானினதும் தலிபான் தொடர்பு பற்றிய எச்சரிக்கை இந்தியாவை நிமிர்ந்து உட்கார வைத்தது. இனி பாகிஸ்தான் பல்லுப்போன பாம்புதான் என்ற அளவில் இந்திய அறிக்கைகள் பறக்க அமெரிக்கப் பிரதிநிதியின் பாகிஸ்தான் விஜயமும் இந்திய சாணக்கியவாதிகள் வெற்றியை நோக்கிய அடுத்த காய் நகர்த்தல் பற்றி யோசித்துக் கொண்டிருக்க பாகிஸ்தான் இறக்கியது ஆப்பு.
இந்தியாவில் நடைபெற்ற 28/11 தாக்குதலுக்கு பாகிஸ்தானில் விசாரணை . அஜ்மலோடு சேர்ந்து ஆறு பேர் மீது விசாரணை. எப் ஐ ஆர் போட்டு கேஸ் பதிவு பண்ணி வழக்கும் தொடங்கி விட்டது. இனி என்ன ஆறு மாதம் ஒரு வருஷம் ..இன்னும் எத்தனை வருடங்களோ..
இந்தியாவிற்கு எந்தக்க்காலத்திற்கும் பதில் சொல்ல வேண்டாத ஆதாரங்கள் கொடுக்க வேண்டாத உள்ளூர் சட்டத்தை மீற முடியாத...ஸ்ராங்கான காரணங்களுடன் அப்படியே இந்தியா எதைக்கேட்டாலும் கோர்ட் உத்தரவு இல்லாது கொடுக்க முடியாது.. அப்படியே கொடுக்க முற்பட்டாலும்... முடிவுறாத வழக்கின் நன்மை கருதி இரகசியங்கள் காப்பாற்றப் படவேண்டிய பொது நல வழக்கு... வழக்கின் மீது வழக்கு....
அட ..அட...எத்தனை அழகான ஆப்பு.. இனி ஜனநாயகத்தின் பாதுகாவலன் அமெரிக்கா என்ன ..ஐ.நாடுகள் என்ன ..எல்லாவற்றையும் விட பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் சட்டங்களை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாகிஸ்தான் அரசு மீற முடியுமா? அப்படி மீறத்தான் யாரால் சொல்ல முடியும்.
இதில் இருந்து நாமும் கற்றுக் கொள்ள ஏதாவது விடயங்கள் இருகின்றதா..?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment