Saturday, November 28, 2009

என்னவென்று ஏசுவது? எதால் அடிப்பது?


ஏதாவது செய்தாக வேண்டும். ஆர்ப்பரிக்கும் கடலலையைப் போல உள்ளம் குதித்துக் குதித்து அடங்க மறுக்கின்றது. கரை முழுதும் ஓடிச் செல்லும் அலை போல ஓடியோடி அடங்க மறுக்கின்றது மனம். காற்றைத் திருகி முறுக்கிக் கொலை செய்யவும் கைகள் பரபரக்கின்றது.
ஏதாவது செய்யவேண்டும். எப்படியாவது தன் எதிர்ப்பைக் காட்டும் குழந்தயைப் போலவாது வாயிலிருப்பதைத் துப்பியாவது எதிர்ப்பைக் காட்டவேண்டுமென்று இருக்கின்றது.

இறந்து போன மக்களைப் பற்றித் துயரப்படாத மனங்களை கல்லுக்கும் மலைக்கும் ஒப்பிட்டு விலகி விட்டேந்தியாகப் போக முடியாதிருக்கின்றது. பொறாமையோ இயலாமையோ என்ன இழவையோ சுமந்து கொண்டு வெறும் சோற்று மூட்டைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆறு கோடித் தமிழர்களை எந்த ஆறு பெருக்கெடுத்து அள்ளிப்போகும் என்று கோபம் குமைந்து கொண்டிருக்கின்றது.

ஒரு நாதாரி கூனும் வயதிலும் நடுங்கும் கரத்திலும் குழறும் வாயிலும் சொல்லும் வார்த்தைகள் உயிரைக் குடிப்பதை மறந்து என்ன வாழ்க்கை பற்றி நாங்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றோம். புலிகளின் கொட்டங்கள் எந்தக் குப்பைக்கூடையிலும் கொட்டுப்பட்டு போகட்டும். அவர்களின் பிழைகளைக் கூட அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து வியாக்கியானம் செய்து வைப்போம். அவர்களின் தோல்வியைக் கூட கைதட்டி பியர் குடித்து வரவேற்போம்.

அவர்களுடன் கூடவே செத்து மக்கிப்போன நம் மக்களை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது. அவர்களின் சாவிற்கு எந்த உவமையையும் மோனையையும் சேர்த்து கவிதை புனைவது. வாழ ஆசைப்பட்டு அனாதைகளாக செல்லடியிலும் குண்டடியிலும் இரத்தச் சகதிகளாகச் சிதைந்து போன அந்த மக்களின் இறப்பைக் கூட இந்த புளுத்துப்போன வாயினாலும் இத்துப்போன வார்த்தைகளாலுமா நாம் விளங்கிக் கொ
ள்வது. தமிழனாக இல்லாவிட்டாலும் சக மனிதனாக ஒரு துளி கண்ணீர் விட யாரிடம் உத்தரவு கேட்டு இறைஞ்சி நிற்கின்றோம்.

மரணித்த மாவீரர்களின் கல்லறையில் ஒரு பூவை எடுத்தெறிய இந்த வஞ்சகப் புழுவின் வாய் ஜாலங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உடன் பிறப்புகளை எரித்துப்போடுவதால் என்ன குறைந்து விடும். உடன் பிறப்பு தமிழுக்காகவா? அல்லது தமிழை வைத்து விபச்சாரம் செய்யும் மு.க விற்காகவா?

புலிகளின் அழிவு பிரபாகரனின் பிழையினால் என்று கூற இந்த முட்டாள் கிழவனுக்கு யார் துணிவைத் தந்தது? தமிழினத்தின் தலைவன் என்று சொல்லிக்கொண்டது காக்கைவன்னியன் போல காட்டிக்கொடுக்கவா? இந்திப் பெண்ணை எதிர்த்து கரி பூசிய இவர்களா இன்று இத்தாலிப் பெண்ணின் முந்தானையில் முகம் புதைத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொள்கையினால் உந்தப்பட்டுத்தானா? இன்று தமிழகம் மு.க வின் தலைமையில் புளகாங்கிதமடைந்து நடை போடுகின்றது. இதைப்பார்த்து பொதிகை மலையில் தமிழ் வளர்த்த அகத்தியன் எரிந்த எழுத்தாணி அரபிக்கடலில் புதைந்து தொலைந்து போகின்றதே.

கலைமாமணி விலைமாமணியாகி எத்தனையோ காலமாகி விட்டது. அதையே இந்தப் புல்லுருவி "அம்மா கொடுத்த முத்தம் போல் "இருக்கின்றது என்கின்றது. தன் மகன் போர்க்களத்தில் புறமுதுகிட்டான் என்று கேட்ட தமிழ்த் தாய் தன் முலையை அறுத்து எறிந்தாள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோம். புறமுதுகிட்டதுடன் காட்டிக்கொடுத்த இந்த கருப்புக்கண்ணாடியின் தாய் எத்தனை முறை தன் முலை அறுத்து எறிவாள்.

"தம்பி தமிழ்ச் செல்வா" என்று தகிடு தத்தம் போட்ட இந்த கிழட்டாடு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. இந்த வேற்றுமை கூட அறியாத தமிழறிஞர்களா செம்மோழியில் மாநாடு நடத்திக் கிழித்து விடப்போகின்றார்கள்.

என்ன? துக்கம் என் தொண்டையை அடைக்கின்றது. இதையெல்லாம் தட்டிக்கேட்கும் ஒரு குரல் கூட இல்லாத செத்த மக்கள் வாழும் நாடா ? தமிழகம்.இறந்து போன மாவீரர்களுக்கு கொடையா படைக்கின்றோம் ஒரு பூவெடுத்துப் போடும் நிகழ்வையும் நடாத்தவிடாது புழுத்துப்போன இளங்கோவன் பானர் எல்லாம் கிழித்தெறிக்கின்றான்.அவன் வீட்டில் வீசிய குண்டு அவன் தலையில் போட வேண்டியது. இந்தப் பொறுக்கிகளையெல்லாம் நாட்டில் நடமாடவிட்டு குடை பிடிக்கும் தமிழனுக்கு எதிரியின் கையால் ஒரு குவளை நீர் கூட குடியாது உயிர் விட்ட சேரலாதன் இரும்பொறையின் கதையை நினைவு படுத்த வேண்டும்.

தமிழனின் சரித்திரத்தை மறந்து விட்ட இந்த தமிழ் நாட்டுச் சனத்தை என்னவென்று ஏசுவது? எதால் அடிப்பது?

No comments: