Sunday, February 22, 2009

முதல்வர் கருணாநிதியை விட்டு விடுங்கள்




உணர்ச்சி உள்ளவன் தான் மனிதன் . தனியே உணர்ச்சி வசப்படுதல் மட்டும் செய்பவனே தமிழன். உணர்ச்சி வசப்படுதலின் உச்சங்களான கண்ணீர் விடுதலும் காலில் விழுதலும் தன்னைத்தானே எரித்துக் கொள்ளலும் தமிழனுக்கே உரித்தான குணங்கள்.

"மாதமோ சித்திரை ..நேரமோ பத்தரை... மக்களோ நித்திரை ...' என்ற அடுக்கு மொழிகளை மாய்ந்து மாய்ந்து சொல்லி உருகிப்போனவர்கள் நாங்கள். உடன் பிறப்புகளின் உணர்ச்சிகளை உருவேற்றி உருவேற்றி களங்களை உருவாக்கி கலகங்களை நிகழ்வாக்கிய கரைவேட்டிகளை அரசியல் தலைமைகளாக உருவாக்கியதே உணர்ச்சியுள்ள தமிழனின் வெற்றிகள்.

நான், என் மதம் ,என் மொழி ,என் சாதி, என் இனம் ....எம் உணர்ச்சி வசப்படுதலுக்கு இன்னும் எத்தனையோ காரணங்கள் உண்டு . தேடித் தேடிக் காரணங்களைக்கண்டு பிடித்தலிலும் நாம் தான் கெட்டிக்காரர்களாச்சே.

"பாம்மையும் பாப்பானையும் கண்டால் ..பாப்பானை முதலில் அடி " என்று ஏன் ? எதற்கு? என்று காரணம் கேட்டத்தோன்றா வினை ஒன்றையே எதிர்பார்த்தவர்கள் நம் தலைவர்கள். பாப்பானின் உயர்வுக்குக் காரணம் கல்வியறிவு. அதில் அனைவரும் மேம்மட வேண்டுமென்ற தேவையை உணர்த்தும் போராட்டம் அவர்களுக்கு அவசியமாகப்படவில்லை.

அதே அரசியலை வழிபட்டவர்கள் பின் தொடர்ந்தவர்கள் உணர்ச்சிகளை உருவேத்தி உருவேத்தி உருவாக்கிய வையே கழக கட்சி குழு அரசியல். இந்த உணர்ச்சிக்குவியலில் உள்வாங்கப்பட்டு இன்றும் (ஐம்பது அறுபது வருடங்கள் இருக்குமா..?) நமக்குள் குத்து வெட்டுகள்.

இவைக்கப்பாலும் உலகம் விரிந்திருக்கின்றது , வேறு வித அரசியல் சமூக கட்டமைப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்திருந்தும் திருந்த விரும்பாத மனோபாவம் பிடித்த நோயாளிகளாகவே நாம் இருக்கின்றோம். ஒருவரை ஒருவர் குறை சொல்லுவதிலும் அடித்துக் கொள்ளு(ல்லு)வதிலும் கேள்வி கேட்காது அடி தொழுவதிலும் உணர்ச்சி வசப்படும் எம் தமிழினத்தை அடித்துக்கொள்வதில் ஆளே கிடையாது.

இதனைப்புரிந்து கொண்ட சாணக்கியத்தாலோ அல்லது இதே உணர்ச்சிக்குழப்ப அரசியலில் இருந்து முளைத்ததனாலேயோ என்னவோ முதல்வர் கருணாநிதி அவர்களும் அவ்வாறு இயங்குவது அவர் தவறு மட்டுமா? அவரை வளர்த்து விட்டதும் வளரவிட்டதும் உணர்ச்சிக்குழம்புகளான நாம் தானே.

முதல்வரின் தேவை ஒரு அரசியல் தலவனாக ஆட்சித்தலைவனாக வேண்டும் என்பதுதானே. நமக்கெல்லாம் இருக்கும் ஆசைகளைப்போல அவருக்கும் இருந்ததில் என்ன தவறு?

அவராக விரும்பிக் கேட்டா நாம் அவரை உலகத்தமிழினத்தலைவராக்கினோம். நம் உணர்ச்சிக் கண்மணிகள் உசுப்பேத்தி விட புகழுக்கு மயங்காத மனிதன் யாருண்டு. நாம் கொடுத்ததை அவர் வைத்திருக்கின்றார்.

ஒரு நாட்டின் மானில அரசியல் கட்சித்தலைவர் எப்படி உலகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியும் என்று உணர்ச்சிவசப்படும் மண்ணாங்கட்டிகளான நமக்குத்தெரியவில்லையே.. அது அப்படியிருக்க அவரை உலகத் தமிழ் தலைவராக வலிந்து கற்பிதம் செய்து விட்டு நாம் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இல்லாது போய்விட்டது.

சென்னையில் மழை பெய்தால் மதுரையில் வெயில் கொளுத்தினால் ஒரு குடை கேட்பதை விட்டு விட்டு எங்கோ ஒரு மூலையில் அடிபட்டுச் சாகும் தமிழனுக்காக அவரை "அதைச் செய் இதைச் செய் " என்று துன்பப் படுத்துவது எவ்விதத்தில் நியாயம். அவரால் முடியாது என்பதும் அவரின் அதிகாரங்களும் ஆசையும் ஆட்சியும் இடம் கொடுக்காது என்பதும் தெரிந்து கொண்டே உணர்ச்சி வசப்படுவதும் வசை பாடுவதும் பஸ்ஸைக்கல்லால் அடிப்பதுவும் கொடும்பாவியைக் கொளுத்துவதும்.. என்ன இது.. கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தில் தோன்றிய மூத்த குடி இன்னும் அங்கேயா நின்று கொண்டிருக்கின்றது.

மக்கள் போராட்டங்களும் வெற்றிகளும் அதே மக்களாலேயே உருவாக்கப்பட வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் வெற்றிகளை உருவாக்கவோ தீர்மானிக்கவோ முதல்வர் கருணாநிதியால் முடியவே முடியாது. அவர்கள் தேவையும் களமும் வேறு. இவர் களமும் தேவையும் வேறு.

அவர் தன் ஆட்சி போதையையும் தன் வாரிசுகளின் வருங்காலத்தையும் ஸ்திரப்படுத்துவதில் என்ன தவறு. நாமெல்லாம் நம் குடும்பம் குட்டிகள் என்று இருப்பதைப் போலவே அவரும் இருக்க முயலுகின்றார். அவரைத் தூக்கி வைத்திருப்பவர்களும் தூக்கி எறியக் கூடியவர்களும் தமிழ் நாட்டு மக்களே.

தமிழ் நாட்டு மக்களின் அரசியல் உரிமைகளாலும் மேலான கடமைகளாலும் உருவாக்கப்பட்டவர்களே முதல்வர் கருணாநிதி ஜெயலலிதா சுப்பிரமணிய சுவாமி சிதம்பரம் போன்றவர்கள். தங்களைக்காப்பாற்றுவதற்கும் தலையில் மிளகாய் அரைத்துக் கொள்வதற்கும் அனுமதி அளித்தவர்களும் தமிழக மக்களே. அவர்கள் வேலையை அம்மக்களே பார்த்துக் கொள்வார்கள்.

ஆகவே அவரை தயவு செய்து விட்டுவிடுங்கள். அவர் நன்மைக்கோ தவறுகளுக்கோ அனுபவிக்கப் போபவர்கள் அவர் வாரிசுகளே. அதை அறிந்து கொள்ள நமக்கு அதிக காலமும் தேவைப்பட மாட்டாது.

எனவே அபரிமித உணர்ச்சி வசப்படுதலை முதலில் விட்டொழிப்போம்.அறிவு பூர்வமாகச் சிந்திப்போம். மக்களால் உருவாக்கப்படும் போராட்டங்களைத் தலைமை தாங்க அரசியல் வாதிகள் தேவையில்லை. அவர்களைத் தேடாதீர்கள்.பொருத்தமற்றவர்களையெல்லாம் மக்கள் தலைகளில் பொருத்திப்பார்க்காதீர்கள். மக்களிலிருந்தே சரியான தலைமைகள் உருவாகும். மக்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள். தற்போதைய உலக ஒழுங்கு பொருளாதார நலன்களின் மீதே கட்டப்பட்டிருக்கின்றது. அதனைப் புரிந்து கொண்டு அவ்வகை முன்னேற்றத்தில் கவனம் செய்வோம். இஸ்ரேலியர்களிடம் இருந்த அளவுக்கதிகமான செல்வம் அவர்களுக்கு ஒரு நாட்டையே வாங்கிகொடுத்தது. அது சரியாயினும் பிழையாயினும் ...அதுவே உண்மை.

புலிகளைப் பின் பற்றுவோரும் அவர்களை வழி மறிப்போரும் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் கருத்துகளை வரித்துக் கொள்ளவோ அரசியல் புலமையையை மெச்சிக்கொள்ளவோ துன்பத்தில் சாகும் மக்கள் யாருக்கும் சம்மதமில்லை. அவர்கள் தங்கள் உயிர் காத்தலுக்கான உபாயங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றார்களேயன்றி உங்கள் உளறல்களைக்கேட்டுக்கொண்டிருக்கவில்லை.

அவர்களுக்குத் தேவை அறிவு பூர்வமான வழிகாட்டுதல். பொருளாதார வெற்றி .அதனால் தொடரும் விடுதலை .. சுதந்திரம்.

No comments: