நாடு தழுவிய ரீதியில் பிரசாரத்துக்கு ஆயத்தம். இந்தியாவின் தலையீட்டால் இலங்கைக்குப் பேராபத்து.
இலங்கையில் இந்தியாவின் புதிய தலையீட்டு நடவடிக்கைகளால் இலங்கைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., அது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிப்பதற்கும், இவ்விடயத்தில் இலங்கை அரசை உறுதியான நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதற்குமாக இன்றுமுதல் பெரும் பிரசாரப் போர் ஒன்றை மேற்கொள்ளவும் தீர்மானித்திருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.இனப்பிரச்சினைத் தீர்விற்கான அரசியல் யோசனையாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசு இப்போது திடீரென முன்வைத்தமைக்கு இந்தியாவின் வேண்டுகோளும் அழுத்தமுமே காரணம் எனக் குற்றம் சாட்டி வந்த ஜே.வி.பி., புதுடில்லிக்கு எதிராக பகிரங்கப் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.இதன்படி இலங்கையில், இந்தியாவின் புதிய நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான ஜே.வி.பியின் முதலாவது பேரணி இன்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது குறித்துத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.கண்டி, காலி போன்ற நகரங்களிலும் இவ்வாறான பேரணிகளை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.இந்தியாவின் வேண்டுகோளுக்கும் அழுத்தத்திற்கும் இணங்கவே இலங்கை அரசு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்தும் முடிவைத் திடீரென எடுத்தது என ஜே.வி.பி. கருதுகின்றது.13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரங்களை வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என ஜே.வி.பி. அச்சம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிற்கு இடைக்கால நிர்வாக சபைகளை வழங்குவதையும் அக்கட்சி எதிர்க்கின்றது.கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இவ்விடயங்கள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.இலங்கையில் தனது பிடியை இறுக்கிக்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே 13 ஆவது திருத்தத்திற்கான அழுத்தத்தை இந்தியா கொடுப்பதாக ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.திருகோணமலையில் எரிபொருள் சேமிப்புக் குதங்களை ஆக்கிரமித்துள்ள இந்தியா, இப்போது அங்கு அனல் மின்சார உற்பத்தி நிலையம் என்ற பெயரில் காலூன்ற முயற்சிப்பதாகவும் ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதாம்.இதேவேளை, அக் கூட்டத்தில் மஹிந்த அரசின் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் நாடு தழுவிய பிரசாரத்தை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.இதற்கான முதலாவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.அரசு இந்த யுத்தத்தையும் அதன் பெறுபேறுகளையும் அரசியல் இலாபம் தேடுவதற்காகப் பயன்படுத்துகிறது என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க பொதுக்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.அரச செலவில் ஆடம்பரக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்ற அதேவேளை, பொதுமக்களும் படையினரும் எதிர்கொள்ளும் துயரங்கள் அலட்சியம் செய்யப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மக்கள் பொருளாதார நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்கின்ற அதேவேளை, அரசு மக்களினதும் இராணுவத்தினரினதும் துயரங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபமீட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சோமவன்ஸ அங்கு கடுமையாகக் குற்றம் சுமத்தினார்.அரசுக்கு எதிரான ஜே.வி.பியின் தற்போதைய பிரசார நடவடிக்கைகளை ஏப்ரல் 23 ஆம் திகதி வரை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தியாவிற்கும் அரசுக்கும் எதிராக இரட்டைப் பிரசாரத்தை ஒரே சமயத்தில் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது
Monday, February 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment