Wednesday, April 01, 2009

நம்ம மொக்கச்சாமி வந்துருக்காக!


"தமிழக மக்களின் துணையுடன், இந்திய அரசின் ஆதரவைப் பெறுவோம் என்று விடுதலைப் புலிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தூதரக உறவுகளுக்கான பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வராஜா பத்மநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்."

என்று ஒரு செய்தி வந்திருக்கின்றது. (http://thatstamil.oneindia.in/news/2009/04/01/lanka-tigers-hope-to-win-indias-heart-through.html)

இன்று இலங்கையில் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்படுகின்ற யுத்தம் முழுக்கமுழுக்க இந்திய காங்கிரஸ் அரசின் உந்துதலிலேயே நடைபெறுகின்றது என்பது யாவரும் அறிந்ததே. இந்திய இராணுவம் மற்றும் போர்க்கருவிகளை இந்த யுத்தத்தின் நிமித்தம் இந்தியா அனுப்பிக்கொண்டிருப்பது பல சந்தர்ப்பங்களிலும் அம்பலமாகியுள்ளது.

இராணுவ ஆலோசகர்களாக வழி காட்டிகளாக யுத்தத்தை முண்டுகொடுத்துக்கொண்டிருந்த இந்திய இராணுவம் இறுதியில் தானே நேரடியாகக் களம் இறங்கியுள்ளது என்பதற்கும் வன்னிக்காடுகளில் சிதறிக்கிடந்த பல இந்திய இராணுவத்தின் உடல்களே சாட்சியமாகியது. போரிற் காயம் பட்ட இந்திய இராணுவ வீரர்களின் சிகிச்சை தேவைக்காகவே அண்மையில் இந்திய வைத்தியர் குழுக்களும் அங்கு சென்றது என்ற கருத்தும் உள்ளது.

இவ்வாறான செய்திகள் இந்திய இராணுவம் தமிழர்களுக்கு எதிராக சிங்கள பாசிசப்படைகளுடன் சேர்ந்தே களமிறங்கியிருந்ததுஎன்பதை நிரூபிக்கின்றது. நிலமை இப்படியிருக்கையில் இந்திய அரசின் ஆதரவை எப்படி எதற்காகப் பெற்றுக்கொள்ள புலிகள் முயல்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

தமிழீழ விடுதலையை எதிர்க்கும் முதன்மைச் சக்தி இந்தியா என்ற நிலையிருக்கையில் இந்தியாவிற்கு இரங்கற்பா எழுதும் புலிகளின் அறியாமை தான் என்ன? புலிகளை ஒடுக்குவதே தன் ஆயுட்காலக் கடமையாகக் கொண்டிருக்கும் சோனியாவைத் தலமையாகக் கொண்ட இந்திய காங்கிரஸ் அரசு அள்ளிக்கொடுக்கப்போவது தான் என்ன?

இது ஒருவகை இராஜதந்திரம் என்று புலிகள் சப்பைக்கட்டு செய்யக்கூடும். இராஜதந்திரமாகச் செயற்பட்டிருக்க வேண்டிய காலம் ராஜீவ்வின் கொலைக்களக்காலம். அப்போது விட்ட இராஜதந்திரத்தை இப்போது துரத்திப்பிடிக்க முற்படுவது எந்தப் பயனையும் தரப்போவதுஇல்லை. அதே நேரம் இராஜீவ்வின் கொலை நடந்ததானாலேயோ நடக்காது விட்டதனாலோ இந்தியாவின் அஜண்டா மாறியிருக்கப் போவதில்லை.

இதை இந்தியாவின் ஆக்கிரமிப்பு அபிலாசையுடன் பொருத்திப்பார்க்க வேண்டும். பொருளாதாரச் சுரண்டலை மையமாகக் கொண்ட இராணுவ ஆக்கிரமிப்பு இவ்வாறுதான் செயற்படும். அதை எதிர்க்கவும் எமது மண்ணைக்காக்கவுமான போராட்டத்தையே புலிகள் அல்ல எவர் தமிழர் சார்பில் போராட்டத்தை முன்னெடுக்கின்றார்களோ அவர்கள் கைக்கொள்ள வேண்டும்.

எமது போராட்டத்தின் எதிரிகளின் எதிரிகளை நாம் இனங்கண்டு நட்புக்கொள்ள வேண்டும். இந்தியாவின் ஏகடியம் பிடித்த அரசியலாளர்களுக்கு கருத்துச் சொல்லி எமது நேரத்தை பாழ்படுத்துதல் தேவையில்லை.நாட்டு நலன் என்ற போர்வையில் தம் கல்லாப்பெட்டியை நிரப்பும் நீசர்களும் போராட்டத் தீரர்களும் ஒன்றல்ல.

இந்திய இறைமை பற்றி அவர்கள் வாய் கிழியக்கதைப்பது போலவே எமது உரிமையில் தலையிடாது இருக்க நாம் அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இந்து சமுத்திரப்பிராந்தியம் ஒரு இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இப்பிராந்தியத்தில் வாழும் அனைத்து நாடு இனம் மொழி சார்ந்த அனைவருக்கும் இங்கு உரிமை உண்டு.

எந்த நீதியின் அடிப்படையிலும் உரக்கப்பேசப்படக்கூடிய உண்மையைப்பற்றியே இந்தியாவிற்கு போதிக்க வேண்டும். ஈழத்தமிழ் மக்கள் இந்தியாவின் அடிமைகள் அல்ல என்பதை தமிழ் மக்களுக்காகப் போராடும் புலிகள் உரத்த குரலில் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். சர்வதேச அளவில் ஈழத்தமிழ் மக்களின் இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எம்மைப்போலவே தமது இன மண் விடுதலைக்காகப் போராடும் மக்களுடன் சக்திகளுடன் கரம் கோர்க்க வேண்டும்.

புலிகளின் கொள்கை பரப்புச் செயலாளருக்கு இத்தனை வேலைகள் இருக்க இந்த வேண்டாத வேலையில் காலத்தைப்போக்குவது எமக்கே பின்னடைவாகும். சின்னஞ் சிறு கியூபா அமெரிக்காவிற்கே சிம்ம சொப்பனமாயிருப்பது வரலாறு.

தமிழக மக்களின் ஆதரவு என்றும் எமக்கு உண்டு. அதில் யாரும் குறை சொல்லமுடியாது. இந்தியா என்பதே உருவாக்கப்பட்ட நாடு. அதில் மும்முடி வேந்தர்கள் கட்டி ஆண்ட தமிழகமும் அடிமைப்பட்டிருப்பது காலத்தின் சோகம். அன்று சோழரிடம் அடிமைப்பட்டுக்கிடந்த சிங்கள தேசத்தை இன்று தூக்கிப்பிடித்திருப்பது ஆரிய காங்கிரஸ்ஸும் இத்தாலிய சோனியாவும்.

புலிகளின் பிரதிநிதியின் இந்த ஸ்டேட்மண்ட் "நம்ம மொக்கச்சாமி வந்துருக்காக!" கணக்கில் தான் இந்திய அரசால் பார்க்கப்படும். இந்த இழி நிலை நமக்கு வேண்டுமா என்று அனைவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

No comments: