Thursday, February 05, 2009
கண்ணால் காண்பதுவும் .....
ஈழத்தமிழகத்தில் நாதியற்றுக் கொல்லப்படும் உயிர்களை குறித்தான தமிழக உறவுகளின் உணர்வுகளும் அது மேலான அரசியலும் அது குறித்த விமர்சனங்களும் பதிலடிகளுமாக ஏகத்துக்கும் ரணகளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அரசியல் கட்சிகளின் அறுவடைகளும் ஆதாயங்களும் பலவித முகங்களைச் சூடிக்கொண்டு களமிறங்கியிருக்கின்றது.
அரசியல் வாதிகளின் முகங்கள் காட்டிக்கொடுப்பவர்களாகவும் காரியவாதிகளாகவும் கோமாளிகளாகவும் இன்ன பிற வடிவங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவர்களுடன் பத்திரிகையாளர்களும் அரசியல் ஏவுநாய்களான அல்லது தன்னார்வ காழ்ப்புகளுடன் உள் நுழைந்திருக்கும் அதிகாரவர்க்கமும் விமர்சனத்திற்கு ஆட்பட்டு பந்தாடப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
இத்தனையையும் சாதித்துக் கொண்டிருப்பது வலைப்பதிவர்கள் என்ற சநாதனக்கூட்டம்.
வலிமைமிக்க ஆயுதமாக பேனாவை தம் உணர்வென்ற குருதியால் நிரப்பி எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். அரசியல் வாதிகளை கேள்வி கேட்பது என்ற பயங்களுக்கு அப்பாற்பட்டு அவர்களைக் கிழித்தெடுத்து தோரணமாய்த் தொங்கப்போட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
பத்திரிகைகள் என்று பந்தா போட்டு உட்கார்ந்திருந்தவர்களையெல்லாம் ஓரமாய்ப்புறந்தள்ளி பத்தோடு பதினொன்றாய் கருத்து மட்டுமே சொல்லும் நிலையில் வைத்திருக்கின்றார்கள்.
பதிவர்களைப்படிக்கும் கூட்டம் ஏனோதானோவென்று இவர்களையும் படித்து வைப்பதே இப்போது உண்மை நிலை.
இத்தனை வலிமையுடன் கருத்துகளை மட்டுமே வைக்கத்தெரிந்த இப்பதிவர்களைப் பற்றியதே என் கோபம். தெருக்கோடியில் கூட்டம் கூட்டி அரசியல் செய்யும் சாதாரண அரசியல் வாதிக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கின்றது.
தெருவோர அரசியல் வாதியின் பேச்சு அந்த தெருவோடு போச்சு. அவன் தலைவன் போடும் பிச்சையோடு அவன் தமிழ் போச்சு.
இதுதானா இந்தப்பதிவர்களின் நிலையும். மனதில் எழும் ரெளத்திரங்கள் எல்லாம் பேனாவின் சொறிதலில் நீர்த்துப்போவதா உங்கள் தேவை?
அதற்கப்பால் உங்களுக்கான தேடுதலோ தேவையோ இல்லையா?
அப்படியாயின் வியாபாரிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? எதுவித வித்தியாசமும் இல்லா உங்கள் எழுத்தின் பயன் என்ன?
உங்கள் கருத்துகளில் கவரப்பட்டு குமியும் எண்ணங்களில் உங்கள் எண்ணவோட்டத்துடன் இசையும் நண்பர்களுடன் சேர்ந்து என்ன செய்யப்போகின்றீர்கள். அக்தில்லாது நன்றி சொல்லி உங்கள் எழுத்தின் வீரியம் பற்றி உச்ச்சுக்கொட்டி முதுகு சொறிந்து கொள்ளப்போகின்றீர்களா?
இது மட்டும் தானா உங்கள் இருப்புக்கான அடையாளம். நித்தம் சோறு தின்று வாழும் மனிதரைப்போல்....
தலைவர்களை யாரும் உருவாக்குவதில்லை.... அவர்கள் தாங்களாகவே உருவாகின்றார்கள்....
யோசியுங்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment